பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது - இப்ராஹிம் தொடர்பில் ஜே.வி.பி. விரைவில் பதிலளிக்க நேரிடும் : அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது - இப்ராஹிம் தொடர்பில் ஜே.வி.பி. விரைவில் பதிலளிக்க நேரிடும் : அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று குண்டா அல்லது கை குண்டா என்பது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு வெகுவிரைவில் தெரியவரும். தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியபட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டமை குறித்து விரைவில் இவர் தெளிவுபடுத்தலை முன்னெடுக்க நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சுய  தொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் மேல் மாகண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களில் இவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டின் பொதுச் சட்டம் குறித்த அண்மையில் இவர் சர்ச்சைக்குரிய கருத்தினை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்தும் விசாரணை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. மதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அடிப்படைவாதத்துக்கு வழி வகுத்து அது தீவிரவாதமாக தோற்றம் பெறும். ஆகவே எதனையும் அலட்சியப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று வெடி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விமர்சிக்கிறார். எமது கருத்துக்கள் வெற்றி வெடியா அல்லது. கைக்குண்டா என்பது வெகுவிரைவில் அவருக்கு தெரிய வரும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகிய இளம் வர்த்தகர்களின் தந்தை மொஹமட் இப்ராஹிம். இவர்கள் ஊடாக பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

மொஹமட் இப்ராஹிம் என்ற கோடீஸ்வர வர்த்தகர் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad