இலங்கை நிர்வாக சேவை தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? - இம்ரான் மஹ்ரூப் - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

இலங்கை நிர்வாக சேவை தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? - இம்ரான் மஹ்ரூப்

இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சை மூலமான தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? ஏன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு நடத்தப்பட்ட மட்டுப் படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் 69 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றினர். எனினும் இத்தெரிவில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எவருமில்லை.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சகல போட்டிப் பரீட்சைகளிலும் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் சித்தியடைந்துள்ளார்கள். சிறுபான்மையினத்தவர்களுள் திறமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்.

இவ்வாறான நிலையில் இந்தப் பரீட்சையில் மட்டும் ஏன் சிறுபான்மையினர் எவரும் தெரிவாகவில்லை என்ற கேள்வி சிறுபான்மையின மக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பில் பலர் என்னுடன் உரையாடினர். இந்த அரசின் சிறுபான்மையினர் புறக்கணிப்பாக இது இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அரசினால் நடத்தப்படுகின்ற பாடசாலை மட்டத்திலான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தேசிய மட்டச் சாதனைகளை சிறுபான்மையின மாணவர்கள் புரிந்து வருகின்றனர்.

பல்கலைக்கழகப் பரீட்சைகள், போட்டிப் பரீட்சைகளில் சிறுபான்மையின மாணவர்கள் பெருந்திறமைகளைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பரீட்சையில் மட்டும் சிறுபான்மையினர் தோற்று விட்டார்களா? என்பதை ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கின்றது என்பது நியாயமான கருத்தாகும்.

எனவே, பொதுநிர்வாக அமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த நியாயமான சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad