உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன - மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப உரையில் ஐ.நா செயலாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன - மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப உரையில் ஐ.நா செயலாளர் நாயகம்

(நா.தனுஜா)

உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடை செய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. மேலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அண்மைக் காலமாக ஜனநாயகக் கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார்.

அவரது உரையில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை எம்மை பிறருடன் சமஅளவில் இணைக்கின்றது. மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும்.

அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பான சவால்களை முழு வீச்சில் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பாக மனித உரிமைகள் பேரவை விளங்குகின்றது.

ஒரு வருடத்திற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான செயற்திட்டமொன்றுக்கு நான் அழைப்புவிடுத்தேன்.

கடந்த வருடம் கூட்டத்தொடருக்கான நாமனைவரும் ஒன்றிணைந்து சில நாட்களிலேயே, சிறிதளவும் ஈவிரக்கமின்றி கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் தாக்கியது.

எனினும் அந்தத் தொற்றுநோய் குடும்பங்களுக்கு இடையிலான தொடர்பையும் மனித உரிமைகளின் முழுமையான பரிமாணத்தையும் வெளிப்படுத்தியது. அதேவேளை பிரிவினைகள், இயலாமை, சமத்துவமின்மை, மனித உரிமைகளில் தளர்வுகள் உள்ளிட்ட புதிய சவால்களையும் கொவிட் - 19 வைரஸ் பரவல் தோற்றுவித்தது.

தொழில் இழப்பு, கடன்சுமை, வருமான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெருமளவான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தில் அடையப்பட்ட முன்னேற்றம் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பல தசாப்தகாலங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக மிகமோசமான வறுமை உலகநாடுகளைப் பாதித்திருக்கின்றது. சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமலும், வரையறுக்கப்பட்ட வளங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றின் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனின், தடுப்பூசி ஏற்றும் பணிகளில் சமத்துவமின்மையாகும். உலகலாவிய ரீதியில் சுமார் 130 நாடுகளுக்கு இன்னமும் ஒரு தடுப்புமருந்து கூடக் கிடைக்கவில்லை.

தடுப்பூசி ஏற்றுவதில் சமத்துவம் பேணப்படுவதென்பது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தும். எனினும் தடுப்பூசி வழங்கலில் கடைப்பிடிக்கப்படும் தேசியவாதம் அதனை மறுத்துள்ளது.

கொவிட் - 19 தடுப்பூசி என்பது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் பொதுவானதாகவும் அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். இந்த வைரஸ் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் சிவில் சமூக இடைவெளியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சில நாடுகளின் அரசாங்கங்கள் இந்த கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.

அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட வரையறைகள் தேர்தல் நடைமுறைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிர்த்தரப்புக்களின் குரலைப் பலவீனப்படுத்துவதற்கும் உபயோகிக்ப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அடிப்படைவாதம், அடக்குமுறைக்கு உள்ளாக்கல், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதேவேளை நாஸிசவாதம், வெள்ளையின மேலாதிக்கம், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

மேலும் உலகளாவிய ரீதியில் சிறுபான்மையின சமூகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

ஒரு சமூகத்தின் பல்வகைமைத் தன்மைக்கு காரணமாக அமைவது சிறுபான்மை சமூகங்களேயாகும். எனவே அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியான தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏற்றவகையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

அண்மைக் காலமாக ஜனநாயகக் கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. நாமனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகளைப் பாதுகாத்து ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக இவற்றை மாற்றியமைக்க முடியும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment