இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது - ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது - ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது. ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும். அதற்கான அவசியமும் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும். நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும் இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரமில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22.02.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். கடந்த அரசாங்கம் ஜெனிவா விவகாரத்தையும் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தால் மனித உரிமைகள்  பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக 2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளிவிவகார கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கூட்டத் தொடரில் 30.1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக விலகியது.

இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக கடும்வாத கொள்கையில் செயற்படுவதை காண கூடியதாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது.

பொய்யான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அறிக்கையினை நிராகரித்துள்ளோம்.

மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை முன்வைக்கவுள்ள தீர்மானங்கள், எதிர்கால திட்டமிடல் ஆகியவற்றை வெளிவிவகார அமைச்சர் கூட்டத் தொடரில் தெளிவுப்படுத்துவார். நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்படும் ஒருபோதும் எதிராக இந்தியா செயற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் மனித உரிமைகள் பேரவைக்கு தலையிடும் அதிகாரம் கிடையாது. மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad