சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது சம்பள பிரச்சினையை மேலும் இழுத்தடிக்கும் செயலாகவே அமையும் என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1999 ஆம் ஆண்டிலேயே கைச்சாத்திடப்பட்டது. அப்போது அடிப்படை சம்பளமாக 101 ரூபா வழங்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த உடன்படிக்கை 2002 இல் கைச்சாத்திடப்பட்டது. அதன்போது நாட் சம்பளமாக 121 ரூபா வழங்கப்பட்டது. ஆக இரு வருடங்களில் 20 ரூபா சம்பள உயர்வே பெற்றுக் கொடுக்கப்பட்டது. தூரநோக்கற்ற சிந்தனையே இதற்கு காரணம். கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள இவ்வாறான விடயங்கள்தான் இல்லாது செய்ய வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளது. அதனை தொழிலாளர்களுக்கு சாதகமான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தவறியுள்ளன.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபை தீர்மானம் எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சர் விடுக்க வேண்டும். அத்துடன், பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
அதனை விடுத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலாகவே அமையும். ஏனெனில் அரச இணக்கப்பாட்டுடனேயே பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை திடீரென கையகப்படுத்தினால் கம்பனிகள் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடக்கூடும். அது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெறுகின்றது. அவ்வாறு நடைபெற்றால் அது சம்பள பிரச்சினையை மேலும் இழுத்தடிக்கும் அபாயம் உள்ளது.” என்றார்.

No comments:
Post a Comment