முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களை யார் தண்டிப்பது? - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களை யார் தண்டிப்பது?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு கட்சியின் அனுமதியின்றி ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் நான்கு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வலுவான கோரிக்கை பலராலும் வழியுலிறுத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (13) முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இந்த நான்கு உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், உயர்பீடக்கூட்ட முடிவில் மன்னிப்பு என்ற வார்த்தையுடன் நான்கு பேரும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த நடவடிக்கைகளை கட்சிய்தலைமையும், உயர்பீடமும் மேற்கொள்ளவில்லை என பலமான விமர்சனங்கள் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் மத்தியிலிருந்து முன்வைக்கப்படுவதை சமூகவலைதளங்கள், ஊடகங்களில் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி பெறப்பட்ட அமானிதம் இன்று பாழாக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிக்க முடியாது. அதே போலே, இவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதால், இவ்வரசாங்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதோடு, கட்சியைப் பலவீனப்படுத்தவும், முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பல கூறுகளாகப் பிரிக்கும் நடவடிக்கைகள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் முன்னெடுக்க வாய்ப்பாக அமையும்.

20வது திருத்தத்திற்கு வாக்களித்த இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

இவ்வெதிர்ப்பு தங்களின் எதிர்கால அரசியலைச் சூனியமாக்கி விடுமென்பதோடு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதும், வெளியேற்றப்படுவதும் ஆபத்தாக முடியுமென்பதால், தங்களுக்கு விருப்பமில்லாத நிலையில், தங்களின் அரசியலிருப்புக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததை தவறு என்பதால் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் மன்னிப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டார்கள்.

இவ்வாறு மன்னிப்புக் கோரியவர்கள் தொடர்ந்தும் கட்சித் தீர்மானங்களுடனும் தலைவருடனும் இணைந்து செயற்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் சொன்னது போல் செயற்படுகிறார்களா? என்று சிறிது காலம் அவதானிக்க கட்சி தீர்மானம் எடுத்திருக்கிறது.

எனவே தான், கட்சி என்ற அடிப்படையில் தூரநோக்கோடு பல விடயங்களைக் கருத்திற்கொண்டு கட்சியோடு இணைந்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்தாக வரும் என்பதோடு இவ்வதிகாரம் சிறுபான்மைக்கெதிராகப் பயன்படுத்தப்படுமென புத்திஜீவிகளால் எதிர்வு கூறப்பட்ட நிலையிலேயே இவர்கள் அதற்கு ஆதரவு வழங்கி நிறைவேற்றினார்கள்.

அதன் விளைவை ஜனாஸா விடயத்தில் கண்டு கொண்டோம். இவை ஆரம்பம் தான். இன்னும் எதிர்காலத்தில் சிறுபான்மைக்கெதிராக பலமாக இவ்வதிகாரம் பயன்படுவதைப் பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கையில் இவ்வதிகாரம் அதிகளவான தாக்கத்தை எதிர்காலத்தில் செலுத்தலாம்.

இப்பாவங்களை துணை போனவர்கள் சுமக்க வேண்டியது தான். இவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்கு நடந்து கொண்ட, தேர்தல் வெற்றியின் பின் நடந்து கொண்ட முறைகளைப் பார்க்கும் போது, அரசியல் வியாபாரம் இடம்பெற்றுள்ளதை உணரலாம்.

தாம் முதல் போட்டு வியாபாரம் செய்து தற்போது இலாபம் பார்த்திருக்கிறோம் என இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இவர்களின் தேர்தல் கால அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டு வாக்களித்தவர்களும் எதிர்காலத்தில் இப்பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும்.

தற்போது ஆளும் அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் ஆரம்பித்திருக்கும் நிலையில், இரண்டரை வருடங்களின் பின் பராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் பயன்படுத்தப்படும் நிலையும் ஏற்படலாம்.

எனவே, இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அநீதிகளுக்குப் துணை போன இவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாக்களித்த மக்களே, தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வழங்க வேண்டும்.

இவ்வாறானவர்களைத் தோற்கடித்து சிறந்த பாடத்தை இவர்களுக்கும், இவர்ளைப்போல் எதிர்காலங்களில் செயற்பட எவரும் முன்வராத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் மறதியுடையவர்கள் என்ற அரசியல்வாதிகளின் நம்பிக்கை தான் இவ்வாறு தவறாக சமூக அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்த வைத்திருக்கிறது. இவற்றுக்கு மக்களே எதிர்காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad