எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் அவசியம் - இன, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த வெளிநாட்டு சக்திகள் தீவிர முயற்சி, அதற்கு இடமளிக்காது ஒற்றுமைப்பட்டு செயற்பட பேராயர் அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் அவசியம் - இன, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த வெளிநாட்டு சக்திகள் தீவிர முயற்சி, அதற்கு இடமளிக்காது ஒற்றுமைப்பட்டு செயற்பட பேராயர் அழைப்பு

சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்க நாட்டில் அனைத்து இன, மத, மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

இன, மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாதென குறிப்பிட்ட பேராயர், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என்றில்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் பேராயர் தெரிவித்தார். 

இந்த நாட்டை பாதுகாக்குமாறு நாம் அனைவரும் கடவுளிடம் மன்றாடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். 

தவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் திருநீற்றுப் புதன் விஷேட சிறப்பு வழிபாடு நேற்றையதினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றபோது திருப்பலியில் மறையுரையாற்றும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அது தொடர்பில் தெரிவித்த பேராயர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே தவக்காலத்தை நாம் நிறைவுசெய்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகும் போதே கொடூரமான குண்டுத் தாக்குதல் மூலம் மக்கள் இதே ஆலயத்தில் திருப்பலி பூசையின் போது பலர் கொல்லப்பட்டனர்.

அது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம். அந்த திட்டமிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் நீதியை கோருகின்றோம். குற்றங்கள் மன்னிக்கப்படலாம் எனினும் குற்றங்கள் மறைக்கப்பட்டு விடக்கூடாது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நாம் திருப்திபடும் வகையில் இல்லை. அது தொடர்பில் நாம் இறைவனிடம் முறையிடுவோம். அவரது நீதிமன்றத்திற்கு செல்வோம். சுயநல செயற்பாடுகளால் இந்த நாடு பின்னோக்கி செல்ல விடக்கூடாது .

நூற்றுக்கணக்கான பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது ஒரு தேசிய பொறுப்பாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

குற்றங்களை மன்னிக்கலாம் எனினும் இனியும் இவ்வாறான கொடூர சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பது அவசியம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்று. சில குழுக்களால் அல்லது வெளிநாட்டு சக்திகளினால் அது திட்டமிடப்பட்டிருக்கலாம்.

எமது தாய் நாட்டில் இன, மதங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்ட முயற்சியாகவும் இருக்கலாம். 

அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது நாட்டைப் பாதுகாப்பதற்காக கடவுளிடம் மன்றாடுவோம். இதனை நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன். 

இது எம் அனைவரினதும் நாடு. நாம் அனைவரும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சுயாதீனமாகவும் இந்த நாட்டில் வாழ வேண்டும். புதிய கலாசாரம் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.

சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் தலையிடுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இந்த தவக்காலத்தில் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளோடு கிறிஸ்தவர்கள் அதற்காக விஷேடமாக இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக் கொண்டார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad