இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைப்பதில் முனைப்புடன் செயற்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைப்பதில் முனைப்புடன் செயற்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

(நா.தனுஜா)

நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக நாட்டிற்குள் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருவதை சர்வதேச சமூகம் புறக்கணித்துச் செயற்படக்கூடாது. மாறாக தண்டனை பெறுவதிலிருந்து விலகும் செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டு வந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாகப் பொறுப்புக் கூற வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

'புதிய ஆடைக்குள் இருக்கும் பழைய பிசாசு : மீண்டும் அச்சத்திற்குள் திரும்பிய இலங்கை' என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தல் மீது இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் சிவில் சமூகத்தின் சுதந்திரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் போரின் போது சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதி வழங்கப்படுவதிலும் தடைகளைத் தோற்று வித்துள்ளன.

நாட்டில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டத்தின்போது நடைபெற்ற குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை அடக்குவதற்கும் இடைக்கால நீதிப் பொறிமுறைகளைத் தடை செய்வதற்குமான முயற்சிகளின்போது மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள், சட்டத்தரணிகள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. இது தற்போது விமர்சனங்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போர் மீது அதிகளவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையைத் தோற்று வித்துள்ளது.

வெறுமனே அதிகாரிகளை அதிருப்திக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை மற்றும் அத்தகைய கருத்துக்களை வெளியிட்டமை ஆகியவற்றுக்காக அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்கள் ஆகியவற்றை முன்வைப்பதற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

அத்தோடு கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமை, ஆதாரங்களின்றி தன்னிச்சையாகத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதிலிருந்து சுதந்திரம் பெறல் ஆகியவை உள்ளடங்கலாக சர்வதேச சட்டங்களில் கீழுள்ள கடப்பாடுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் ஆகியவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் விலகியது.

அதிலிருந்து நீதியை அணுகுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் நீதி மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தடை செய்யும் வகையிலேயே அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூடும்போது, இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் மீது அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருவதை சர்வதேச சமூகம் புறக்கணித்துச் செயற்படக் கூடாது.

மாறாக தண்டனை பெறுவதிலிருந்து விலகும் செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாகப் பொறுப்புக் கூறவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad