மனித உரிமைகள் பேரவையை சாதாரணமாக நினைத்தால் யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் - சட்டத்தரணி பிரதிபா மஹநாமஹேவா - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

மனித உரிமைகள் பேரவையை சாதாரணமாக நினைத்தால் யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் - சட்டத்தரணி பிரதிபா மஹநாமஹேவா

(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதுடன், இலங்கையில் முன்னெடுக்கும் தேசிய ரீதியிலான வேலைத்திட்டங்களை உறுதிப்படுத்தும் மாற்று பிரேரணை ஒன்றினை பேரவையில் முன்வைக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர், கலாநிதியும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையால் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாதென கருதி அரசாங்கம் பலவீனமாக இருந்துவிடக்கூடாது, மனித உரிமைகள் பேரவையின் இந்த முயற்சி இலங்கையை யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வைப்பது என்பதை மறந்துவிடாது அரசாங்கம் பிரேரணைக்கு எதிரான ஆதரவை திரட்ட வேண்டும் எனவும் அவசர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவற்றை சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறுகையில், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கை இராணுவம் போர் குற்றங்களை செய்தது என குற்றம் சுமத்தியும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியும் இலங்கையை யுத்த குற்றச்சாட்டில் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமாக மனித உரிமைகள் பேரவைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமையவே ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உப குழுவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவருகின்றனர்.

இலங்கை விடயத்தில் மனித உரிமைகள் பேரவையினால் ஒன்றும் செய்துவிட முடியாது என நினைத்து இந்த நகர்வுகளை சாதாரண விடயமாக கருத வேண்டாம். மனித உரிமைகள் பேரவைக்கு நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் மனித உரிமைகள் பேரவையில் உறுதியான பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி அதன் மூலமாக மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் மூலமாக வேறு நடவடிக்கைள் எடுக்கப்படலாம்.

விடுதலைப் புலிகளின் தேவையை நிறைவேற்றும் விதத்தில் செயற்படும் மேற்கத்தியே நாடுகளின் தேவைக்காகவும், புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவும், புலம்பெயர் தமிழர் பேரவையின் தேவைக்காகவும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கான நடவடிக்கைகளை இங்கிருந்து முன்னெடுத்து வருகின்றது. இந்த முயற்சிகளின் பின்னணியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியொன்றும் உள்ளது.

எனவே இப்போது மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதுவர்களை தனித்தனியே சந்தித்து இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி எமக்கான ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய பொறுப்பு வெளிவிவகார அமைச்சிற்கு உள்ளது.

சீனாவும், கியூபாவும் பொறுப்பை தோலில் சுமந்துள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சகல நாடுகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பொதுமக்களை பாதுகாத்தமைக்காக இராணுவத்தை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இப்போது கூட மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கையில் இலங்கையின் சுகாதார நடவடிக்கைகள், 20 ஆம் திருத்த சட்டம் குறித்தே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் மேலதிக ஒன்றாக 30/1 பிரேரணையையும் உள்ளடக்கியுள்ளனர். ஆனால் இவற்றைக்கண்டு இலங்கை அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையின் போர் நிலவரம் குறித்து உண்மைகளை அறிய வேண்டும் என்றால் தமிழினி எழுதிய புத்தகம் ஆதாரமாக உள்ளது, கே.பி இன்னமும் உயிருடன் உள்ளார். எனவே அவரிடம் ஆதாரங்களை கேட்டறிய முடியும். ஆனால் அவற்றை நிராகரித்து புலம்பெயர் அமைப்புகளின் ஆதாரத்தையே மனித உரிமைகள் பேரவை கருத்தில் கொள்கின்றது. 

எனவே ஜெனிவாவில் முன்வைக்கும் பிரேரணையை நிராகரிப்பது மட்டுமல்லாது உறுதியான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பிரேரணை ஒன்றினை முன்வைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment