அமைச்சர் மஹிந்தானந்தவின் 6 கோடி ரூபா பெறுமதியான கரம் மோசடி வழக்கு ஒத்தி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

அமைச்சர் மஹிந்தானந்தவின் 6 கோடி ரூபா பெறுமதியான கரம் மோசடி வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சதொச முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட இரு நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு விநியோகம் செய்வதற்கு எனும் போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட, ரூ. 60 மில்லியனுக்கும் (ரூ. 6 கோடி) அதிகமான பெறுமதியான கெரம் விளையாட்டு உபகரணங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நலின் பெனாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இவ்வாறு வழக்கை ஒத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நலின் பெனாண்டோ மற்றும் அவரது பிணையாளர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை சுதந்திர ஊழியர் காங்கிரஸ் எனப்படும் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 3.9 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (08) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad