புதிய தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபையின் 13 கோடி ரூபாவுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

புதிய தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபையின் 13 கோடி ரூபாவுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் புதிய தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சுமார் 13 கோடி 41 இலட்சம் ரூபாவுக்குரிய வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர சபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹூல் ஹக் தெரிவித்தார்.

அச்சபையின் விசேட சபைக் கூட்டம் வியாழக்கிழமை 18.02.2021 புதிய நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களில் 13 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏறாவூர் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதற்கு முன்னர் இரு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டபொழுது அது அந்நகர சபையின் 11 உறுப்பினர்களால் இரு தடவையும் நிராகரிக்கப்பட்டிருந்ததன் காரணமாக அப்போதிருந்த நகர சபைத் தலைவரின் பதவி வறிதாக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து கடந்த 11.02.2021 அன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் தவிசாளர் தெரிவு நடைபெற்றது. அதில் புதிய தவிசாளராக எம்.எஸ். நழீம் தெரிவு செய்யப்பட்டார்.

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இவரது தெரிவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஆதரவளித்திருந்தன.

புதிய தவிசாளர் நழீம் தனது கன்னியமர்வில் ஏறாவூர் நகர சபையினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் சலுகைகள் எதனையும் சுய தேவைக்காக பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் நகர சபையின் வாகனங்களைப் பயன்படுத்தவே மாட்டேன் என்றும் சத்தியம் செய்ததுடன் இப்பிரதேசத்திற்கு எந்தவொரு கட்சி சார்ந்த அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஆதரவும் அனுசரணையும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment