பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போது நிலையான பொறிமுறையினை நடைமுறைப்படுத்த பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஓட்டு மொத்த தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்டு பாதுகாப்பான வாழ்விடத்தை நிர்மாணிப்பதற்கு தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு லயின் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள லயின் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல். 

வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின் மற்றும் லயின் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இட வசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணித்தல். 

பிற்காலத்தில் குறித்த வீடுகளை இரு மாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1.3 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணித்தல்.

கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்கி வழங்கல்.

வீடமைப்பிற்கான பெறுமதியின் 50% வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும் அதற்காக 20 வருடகாலம் வழங்குதல். 

லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்த திட்டத்தின் யோசனைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad