இலங்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

இலங்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் தமிழ்ப் பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப் பொறிமுறைகள் அவற்றுக்கான சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதற்குத் தொடர்ந்தும் தவறியிருப்பதுடன், தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்திருக்கிறது என்றும் மிச்சேல் பச்லெட் சுட்டிக் காட்டியிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னைய நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது என்றும் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள் மீதான கண்காணிப்புக்களும் சுய தணிக்கைக்கான அவசியமும் அதிகரித்திருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப் படைகள் மருத்துவமனைகளின் மீதும் வான்வழி ஊடாகவும் கண்மூடித்தனமாகக் குண்டு வீச்சுக்களை நடத்தியதாகவும் சரணடைந்தவர்களைப் படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதாகவும் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதற்தடவையாகப் பரிந்துரைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், தமிழ் கிளர்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் மீது பயணத் தடை விதிப்பதற்கும் அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad