போலி மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய கொரோனா நோயாளி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

போலி மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய கொரோனா நோயாளி

மஹர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள எண்டேரமுல்லையைச் சேர்ந்த கொவிட்-19 நோயாளி ஒருவர் போலி மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.

தனியார் மருத்துவமனையிலிருந்து இரு முரண்பாடான பிசிஆர் சோதனை அறிக்கைகளை இந்நபர் பெற்றிருந்ததாகவும் அதில் ஒன்று கொரோனா தொற்று உள்ளவரென்றும் மற்றொன்று இல்லையென்றும் அறிக்கைகள் வெளிப்படுத்தியதாகவும் இதனால் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் புதிய பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் மஹர சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் நிஹால் கமகே கூறினார்.

இதன்பின் டிசம்பர் 24ஆம் திகதி இந்நபர் புதிய பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டார். மேலும் நாட்டை விட்டு வெளியேறும் அனுமதிச் சான்றிதழ் வழங்க பிசிஆர் சோதனை அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 30 இல் பெறப்பட்ட அறிக்கை இந்நபர் கொவிட்-19 தொற்றுக்காளாகியிருப்பதை உறுதிப்படுத்தியது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பொதுச் சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் டிசம்பர் 29ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக நாட்டை விட்டு வெளியேறியது தெரியவந்ததென அவர் கூறினார்.

ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட போலியான பிசிஆர் சோதனை அறிக்கையைப் பயன்படுத்தி இந்நபர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டுமெனத் தான் நம்புவதாகவும் அவர் இப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை இல்லாமல் எப்படி வெளியேறினார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மிஹார எபா கூறினார்.

இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment