கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதால் தொழிற்சங்க போராட்டமே எமது இறுதி முயற்சி - துறைமுக ஊழியர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதால் தொழிற்சங்க போராட்டமே எமது இறுதி முயற்சி - துறைமுக ஊழியர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இம்மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்கும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. எனவே தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதே எமது இறுதி முயற்சியாகும் என துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் துறைமுக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எழுவர் அடங்கிய குழு மீது நம்பிக்கை கிடையாது அவர்கள் அரசாங்கத்துக்கு சார்பாகவே அறிக்கை சமர்ப்பிப்பார்கள். 

கிழக்கு முனையம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை கிடையாது. கிழக்கு முனையம் விவகாரத்தில் ஜப்பான் நாடு அதிகளவில் பேசப்படவில்லை.

இந்திய அயல் நாடு என்ற ஒரு காரணத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு பண்டமாற்று முறைக்கு அமைய வழங்கும் தீர்மானத்தில் உள்ளது. தேசிய வளங்களை பாதுகாப்போம் என்று அரசாங்கம் பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறது.

கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு இவ்வாரத்துக்குள் அதாவது பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்குள் வழங்கும் உறுதியான தீர்மானத்தில் அரசாங்கம் உள்ளது அதற்கான நடவடிக்கைகள் தற்போது முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுக ஊழியர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து இவ்வாரம் மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம். இதனை தொடர்ந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். எமது முயற்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad