மும்மன்னையில் ஜனாஸா எரிப்பு - வெளிவராத உண்மைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

மும்மன்னையில் ஜனாஸா எரிப்பு - வெளிவராத உண்மைகள்

“வாப்பாவ வீட்டுக்கு கூட்டி போகனும்டு நாங்க கேட்கல்ல, முகத்த மட்டும் காட்டுங்கண்டுதான் கெஞ்சினோம். ஆனா, முகத்தக்கூட காட்டாம எரிச்சுப் போட்டாங்க” என்று கண்ணீருடன் பேசுகின்றார் மும்மன்னையைச் சேர்ந்த எரிக்கப்பட்ட உமருல் பாரூக் என்பவரின் மகன்.

இருதய நோயாளரான உமருல் பாரூக் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று சுகவீனமுற்று அம்புலன்ஸ் ஒன்றின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டபோது நெகடிவ் பெறுபேறே கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பி.சி.ஆர் மாதிரி எடுக்கப்பட்டதுடன் அதன் பெறுபேறு அறிக்கை வெளியாகுவதற்கு இரண்டு நாட்கள் எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் மீண்டும் இருதய வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் அவர் வலியினை தாங்க முடியாமல் உடலில் போடப்பட்ட மருத்துவ குழாய்களை கழற்றி எறியும் வகையிலான அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டார். 

அவருக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஊசி ஒன்று போடப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஒரு சில செக்கன்களில் அவரது உயிர் பிரிந்ததாகவும் உமருல் பாரூக்கின் மகன் தெரிவிக்கிறார்.

அவரது மகன் சம்பவத்தை மேலும் விளக்குகையில், “வாப்பாவின் ஜனாஸாவை ஒரு பையில் போட்டு ஏழு மணிக்கு பிணவறைக்கு கொண்டு போனாங்க. நாலு மணி வரைக்கிம் வெய்ட் பன்ன வேணும்டு சொன்னாங்க” என்று தெரிவிக்கின்றார்.

சகோதரியின் மகனின் உதவியுடன் வீட்டுக்குச் சென்ற அவரை தொலைபேசியில் அதிகாரிகள் தொடர்பு கொண்டு நான்கு பேர் மாத்திரம் ஜனாஸாவை வந்து பார்த்து விட்டுச் செல்லுமாறு பணிக்கப்பட்டார். 

பிரதேச சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் அம்புலன்ஸ் ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு ஜனாஸாவைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் உமருல் பாரூக்கின் மகள் ஒருவரும் இன்னும் இருவரும் சென்றார்கள்.

குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு ஜனாஸாவைப் பார்க்கச் சென்றவர்கள் சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டார்கள். குறித்த ஆவணங்கள் தொடர்பாக எந்தவித தெளிவும் நம்பிக்கையும் இல்லாத இவர்கள் கையெழுத்திட மறுத்தார்கள். 

“வாப்பாவ கடைசியா ஒருக்கா காட்ட சொல்லி கேட்டோம். சவப் பொட்டி கொண்டு வந்திங்களா? 58,000 சல்லி கொண்டு வந்திங்களான்டு கேட்டாங்க” என உமருல் பாருக்கின் மகன் அழுகையுடன் கூறுகிறார்.

தந்தை இறந்த சோகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு நடப்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத நிலையில் ஏன்? எதற்கு என்ற விளக்கங்களை கேட்டபோது, அதிகாரிகள் யாரும் உரிய முறையில் பதிலளிக்காமல் ஆவணங்களில் கையொப்பமிடுமாறு கட்டாயப்படுத்தியதாக மகன் தெரவிக்கின்றார். 

தந்தையின் பி.சி.ஆர். முடிவை காட்டுங்கள் என தொடர்ந்தும் வற்புறுத்திய போதுதான் உமருல் பாரூக்கின் பி.சி.ஆர் பொஸிட்டிவாக வந்திருக்கும் விடயத்தை மகனிடம் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

என்ன செய்வதென்று தெரியாத பிள்ளைகள் கையொப்பமிட மறுத்தார்கள். “நீங்க செய்ற சட்டத்த செஞ்சி கொள்ளுங்க, எங்களுக்கு கடைசியா ஒரேயொரு முறை வாப்பாவ காட்டுங்க” என்று கெஞ்சியதாக மகன் கூறுகின்றார். 

உமருல் பாரூக்கின் மகள் பதினைந்து நாட்களுக்கு மேலாக தந்தையை பார்க்காத நிலையில் தனது தந்தையின் ஜனாஸாவை ஒரேயொரு முறை பார்க்க வேண்டும் என்பது மாத்திரமே அவருடைய வேண்டுகோளாக இருந்தது.

உமருல் பாரூக் சுகவீனமுற்று அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது தனது மகனிடம் “என்ன நடந்தாலும் தனது ஜனாஸாவை எரிப்பதற்கு அனுமதித்து விடாதே” என்று சொல்லி வாக்குறுதி பெற்றுக் கொண்டதால் உணர்வு ரீதியாக கையொப்பம் போட முடியாத நிலைக்கு உமருல் பாரூக்கின் பிள்ளைகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் என்போர் கையொப்பம் போடும்படி தம்மை மிரட்டியதாக மகன் கவலை தெரிவிக்கிறார்.

“எப்பிடியும் எரிக்கத்தான் போறிங்க. ஒரேயொரு முறை முகத்தக் காட்டுங்க” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சியும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை.

இந்த விடயத்தை அறிக்கையிட்ட ஒரு சில ஊடகங்கள் தங்களுடைய கஸ்டத்தை புரிந்து கொள்ளாமல் தாங்கள் முறை தவறி நடந்ததுபோல அறிக்கையிட்டுள்ளதாக மகன் கவலை தெரிவிக்கிறார்.

“வாப்பாவ வீட்டுக்கு கூட்டி போகனும்டு நாங்க கேட்கல்ல, முகத்த மட்டும் காட்டுங்கண்டுதான் கெஞ்சினோம். ஆனா சில ஊடகங்கள் நாங்க தவறு செஞ்சன்டு காட்டீக்கிறாங்க” என வருந்துகிறார் மகன்.

இவ்வாறான ஊடக அறிக்கைகளைக் கண்டு உமருல் பாரூக்கின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர். மேலதிக தேவைகளுக்காக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வீட்டுக்கு வந்தபோது உமருல் பாரூக்கின் மகள்கள் தமக்கு தெரிந்தளவிலான சிங்களத்தில கண்ணீருடன் கதறி தமக்கு அநீதியே நடந்துள்ளதாக முறையிடுகின்றார்கள்.

கையொப்பம் போடாவிட்டால் 18 ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு ஜனாஸா தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. கடைசி வரை தனது தந்தையின் முகத்தைக்கூட பார்க்க விடவில்லை என்று பிள்ளைகள் கதறுகின்றார்கள். இந்த அநீதி இன்னொருவருக்கு நடக்கக்கூடாது என்று கதறுகிறார்கள்.

இந்நிலையில் ஜனாஸா இரவு ஒன்பது மணியில் எரிக்கப்பட்டதாக மகன் தெரிவிக்கிறார். மேலும் ஊடகங்களில் 7 மணிக்கு ஜனாஸா எரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதாகவும் அந்தத் தகவல் பிழையானது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஜனாஸா எரிப்பு தொடர்பான விவகாரத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் உயிரிழக்கும் பலரது சடலங்கள் இவ்வாறு எரிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. 

இதன் காரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளவர்கள், அன்டிஜன், பிசிஆர் பரிசோதனைகளுக்கு அஞ்சி வைத்தியசாலைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.

எம்.ஏ.எம்.அஹ்ஸன் - Vidivelli

No comments:

Post a Comment