போர்க் குற்றம் புரிந்தவர்களே விசாரிப்பதற்கு குழு நியமிப்பது கேலிக் கூத்து - வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது : சாள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

போர்க் குற்றம் புரிந்தவர்களே விசாரிப்பதற்கு குழு நியமிப்பது கேலிக் கூத்து - வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது : சாள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1958 ஆண்டுகளில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். 

நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்றார்.

அத்தோடு, போர்க் குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க் குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேலிக் கூத்தான விடயம்.

இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். மேலும், அவர்களும் இதை ஒரு கேலிக்கை விடயமாகவே பார்ப்பார்கள். தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப் பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு மத அடையாளங்கள் அழிப்பு கலாச்சாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.

அத்தோடு, போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு உயர் பதவிகளும் அமைச்சின் செயலாளர்களாகவும் வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதானது, அரசாங்கமே போர்க் குற்றங்களை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகின்றது.

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 2009 இறுதி யுதத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். 

யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment