இலங்கையில் மாடுகளுக்கு பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று..! : அறிகுறிகள் இவைதான் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

இலங்கையில் மாடுகளுக்கு பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று..! : அறிகுறிகள் இவைதான்

(ஆர்.யசி)

தென்னாபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாடுகளுக்கு பரவும் வைரஸ் வகையொன்று இலங்கையிலும் பரவிக் கொண்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதிகளவிலான கறவை மாடுகள் இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த சில வாரங்களாக மாடுகள் மற்றும் ஆடுகள் இவ்வாறான நோய் தாக்கத்திற்கு உள்ளாகிக் கொண்டுள்ள காரணத்தினால் இது குறித்து கால்நடை வளங்கள் மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சரத் ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது அவர் கூறுகையில், ஆபிரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவும் ஒரு வகையான வைரஸ் தற்போது இலங்கையில் பரவிக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அதனை குணப்படுத்த இரண்டு வகையான தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. வெகுவிரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வைரஸ் பரவல் காரணமாக மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விலங்குகளில் இருந்து ஒரு போதும் இவை மனிதர்களுக்கு தொற்றாது. எனினும் கால்நடைகளை பாதுகாக்கவென விசேட வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. 

தத்தமது கால்நடைகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது என்பதற்கான அடையாளம் என்னவெனில், மாட்டின் உடலில் கட்டிகள் போன்று காணப்படுவதுடன் சிறு சிறு காயங்கள் ஏற்படும். 

கண்களிலும் மூக்கிலும் நீர் போன்று திரவம் வெளிவரும், காய்ச்சல் காணப்படும். எவ்வாறு இருப்பினும் கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சின் மூலமாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு கால்நடைகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad