ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் யாருடன் நெருங்கிப்பழகி இருந்தார் என்பது தொடர்பில் பாராளுமன்ற சி.சி.டி.வி பாதுகாப்பு கமராவை பயன்படுத்தி கண்டறிந்து, அவர்களுக்கு சுகாதார வழிகாட்டலை அறிவுறுத்தி வருகின்றோம் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர் கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுக்கு வருகை தந்தமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வருடத்தின் பாராளுமன்ற முதலாவது அமர்வு கடந்த 5ஆம் திகதி கூடியது. அதன்போது அவர் பாராளுமன்ற சபைக்குள் வந்திருந்தார்.

அதனால் பாராளுமன்றத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பது தொடர்பில் உறுதிப்படுத்த, பாராளுமன்ற சீ.சீ.டி.வி பாதுகாப்பு கமராவை பயன்படுத்திக் கொண்டு தேடி வருகின்றோம். 

அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிப் பழகிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற சேவகர்கள் இருக்குமாக இருந்தால், இது தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நெருங்கிப் பழகிய அனைவரும் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் செயற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad