தடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை : அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

தடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை : அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. தடுப்பூசி தொடர்பில் சுகாதார தரப்பினர் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்துவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால உறவு மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைக்கு முகங்கொடுக்கும் போது, கடந்த ஒரு வருட காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அரசாங்கம் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

பெற்றுக் கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளை முதலில் சுகாதார தரப்பினருக்கும், இரண்டாவதாக பாதுகாப்பு தரப்பினருக்கும், மூன்றாவதாக வயது முதிர்ந்தோருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை தனியார் தரப்பினர் ஊடாக விநியோகிக்க இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையும் எடுக்கப்படவில்லை.

சிறந்த திட்டமிடலுக்கமைய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அரசாங்கம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.கொவிட்-19 தடுப்பூசிக்கு கைமாறு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் இதர காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad