ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பு : கஜேந்திரகுமார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பு : கஜேந்திரகுமார்

(ஆர்.ராம்)

இலங்கையின் பொறுப்புக் கூறலை செய்விப்பதற்காக ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மூன்று கடிதங்களை அனுப்புவதாகவே இணக்கம் காணப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அதன்படி தற்போது முதலாவது கடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர். 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருப்பதனால் எவ்விதமான பயனுமில்லை என்பதை கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த பிரதிபலன்களால் கூட்டமைப்பும் அதனுடன் சார்ந்த ஏனைய தரப்புக்களும் 2012 ஆம் ஆண்டிலிருந்து நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் அவ்விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு இணக்கம் கண்டுள்ளன. 

அதனடிப்படையிலேயே நாம் உள்ளிட்ட மூன்று கூட்டணிக் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், அவரின் அலுவலகம், மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயற்பாடானது, இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தினை செய்விப்பதற்கான வலுவான கோரிக்கையையும் அதேநேரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அவ்விடயத்தினை மீளெடுத்து ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதை மட்டும் கொண்ட கோரிக்கையை மட்டும் உள்ளடக்கியதாகும். 

அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகம் இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கும், அல்லது பொறுப்புக் கூறலைச் செய்வதற்கான காரணங்களை சேகரிப்பதற்குமாக சிறியப் பொறிமுறையை ஒத்ததாக 12 மாதங்கள் காலவரையறையுடன் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கும் கோரப்பட்டுள்ளது. இது பொறுப்புக் கூறலை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியின் முதல் செயற்பாடாகும். 

இதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் மற்றும் பொதுச் சபையின் உறுப்பு நாடுகள் ஆகிய தரப்புக்களுக்கும் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கான பொறுப்புக் கூறலை செய்ய வேண்டும் என்பதை வலிறுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அத்தரப்புக்களிடத்திலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டும். 

அதேநேரம் மூன்றாவதாக, ஐ.நா. செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள், மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியவற்றுக்கு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கான சான்றாதாரங்களைக் குறிப்பிட்டு அவர்களிடத்தில் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்க வேண்டும். 

ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அது சார்ந்த தரப்புக்களுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து மேற்படி அடுத்த இரண்டு செயன்முறைக்கான தனித்தனியாக இரண்டு கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைப்பதென்று இணக்கம் காணப்பட்டது. 

ஆனால் தற்போது அவ்விடயம் பற்றி ஏனைய தரப்புக்கள் கரிசனை கொள்வதாக இல்லை. அவ்விடயம் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலிறுத்தி நான் மின்னஞ்சலை அனுப்பியுள்ளபோதும் இதுவரையில் அது குறித்து எந்த பதிலளிப்புக்களும் கிடைக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad