மூடப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

மூடப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டதனால் மூடப்பட்டிருந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பணிகள் திங்கட்கிழமை 11.01.2021 தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அடுத்து அங்கு கடமையில் இருந்த 40 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த 30.12.2020 அன்று இடம்பெற்ற ரபிட் அன்ரிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் ஏழு பேரும் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை தொற்றுக்குள்ளாகிய பொலிஸாருடன் கடமையிலிருந்த 40 பொலிஸார் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவதானிக்கப்பட்டனர். அதனையடுத்து தற்சமயம் ஏறாவூர் பொலிஸ் நிலையம் தனது வழமையான பணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்த காலப் பகுதியில் பொலிஸ் முறைப்பாட்டை அளிக்க விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கேட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment