உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அடிப்படை உரிமை மனுக்களை மார்ச்சில் எடுத்துக் கொள்ள தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 15, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அடிப்படை உரிமை மனுக்களை மார்ச்சில் எடுத்துக் கொள்ள தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் மார்ச் 08, 09, 10 ஆம் திகதிகளில் எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் நாட் குறித்துள்ளது.

குறித்த தாக்குதலில் போதிய புலனாய்வுத் தகல்கள் இருந்த போதிலும் அதனைத் தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிராக குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவ மத குருமார்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் இன்றையதினம் (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெனாண்டோ, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகிய உச்ச நீதிமன்றத்தின் ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது இவ்வாறு நாட் குறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி பியல் டி சில்வா ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷ பெனாண்டோ, சட்டமா அதிபர் தமது கட்சிக்காரர்கள் சார்பில் இனிமேல் ஆஜராக மாட்டார் எனத் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

எனவே, அவர்கள் சார்பாக நீதிமன்றில் தாம் ஆஜராவதாக தெரிவித்தார். சட்டமா அதிபர் தமது கட்சிக்காரர்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் எதனையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய திகதியொன்றை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அதன்படி, குறித்த ஆட்சேபனைகளை எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுதாரர்களுக்கு தங்கள் ஆட்சேபனைகளை பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருந்தால் பெப்ரவரி 24 அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏழு நீதிபதிகள் கொண்ட குழாம், இம்மனுக்களை எதிர்வரும் மார்ச் 08, 09, 10 ஆம் திகதிகளில் விசாரிக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad