ஒரு தொகை பணம் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

ஒரு தொகை பணம் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது

(செ.தேன்மொழி)

கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 பவுன் தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஒருவர் 'சித்திக்' எனப்படும் பிரபல போதைப் போருள் கடத்தல்காரரின் உதவியாளர் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கிரேண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான பணம் மற்றும் தங்கத்தை வைத்திருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் தமது வீட்டில் பை ஒன்றுக்குள் பணத்தையும் தங்கத்தையும் மறைத்து வைத்திருந்துள்ளதுடன், அவற்றை பெற்றுக்கொண்ட முறை தொடர்பில் உரிய ஆதாரங்கள் இல்லாமையின் காரணமாகவே குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 பவுன் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுள் ஒருவர், போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளில் முதல் நிலையில் உள்ள, பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான 'சித்திக்' என்பவரின் உதவியாளர் என்றும் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்களுக்கு எதிராக கறுப்பு பணச்சுத்திகரிப்பு சட்டம் மற்றும் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

யாராவது தொடர் தன்னிடமுள்ள பணம் அல்லது சொத்து தொடர்பில் உரிய ஆதாரங்களை காண்பிப்பதற்கு தவறினால் அந்த பணம், மனித கடத்தல், போதைப் பொருள், துப்பாக்கி, மதுபானம் போன்ற சட்டவிரோத கடத்தல் செயற்பாடுகள் ஊடாக ஈட்டப்பட்ட பணமாகவே கருதப்படும். அதனால், அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்நிலையில், மேற்படி சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad