மாவனல்லை பிரதேசத்தில் வெடி பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் ஒருவர் கைது - சிலைகள் மீதான தாக்குதல்களுக்கு தொடர்பு உள்ளதா? - விசாரணைகளை முன்னெடுக்கும் ஐந்து சி.ஐ.டி. குழுக்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

மாவனல்லை பிரதேசத்தில் வெடி பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் ஒருவர் கைது - சிலைகள் மீதான தாக்குதல்களுக்கு தொடர்பு உள்ளதா? - விசாரணைகளை முன்னெடுக்கும் ஐந்து சி.ஐ.டி. குழுக்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

மாவனல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் காணாமல் போனமை தொடர்பிலான சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான 5 சி.ஐ.டி. குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அசேல ஹேரத் தலைமையிலான குழுவினர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததாகவும், அவரை மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரிடம் கையளித்ததாகவும் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார். 

கைது செய்யப்பட்டவர், குறித்த வெடி பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் மாவனல்லை - மொல்லியகொட கருங் கற்பாறை உடைக்கும் இடத்தில் (கல் குவாரி) வேலை பார்க்கும் பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளை ஆரம்பத்தில் மேற்பார்வைச் செய்த கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.வி. கீர்த்திரத்ன கூறினார். 

இந்நிலையிலேயே சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை மிக சூட்சுமமாக முன்னெடுப்பதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளில் இதுவரை பலரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சி.ஐ.டி. குழுக்களுக்கு மேலதிகமாக எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவையின் அதிகாரிகளும் இந்த விடயம் தொடர்பில் உளவுத் தகவல்களை திரட்டி வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

வெடி பொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் குறித்த கல் குவாரியின் உரிமையாளர் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இதனையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

திருடப்பட்ட பொருட்களில் 15 கிலோ கிராம் அமோனியம் நைட்ரேட், 750 கிராம் வோட்டர் - ஜெல், 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 35 மீட்டர் டெட்டனேட்டர் அண்டு ஆகியவை அடங்குகின்றன.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் போது, தற்கொலை குண்டுதாரிகள் குண்டு தயாரிக்க இவ்வாறான வெடி பொருட்களையே பயன்படுத்தியிருந்தமையாலும், குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மாவனல்லையை மையப்படுத்தி பல நாசகார செயல்களில் ஈடுபட்டிருந்தமையாலும் வெடி பொருட்கள் காணாமல் போனமை தொடர்பிலான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தன.

இவ்வாறான நிலையிலேயே, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன விஷேட பாதுகாப்பினை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறான நிலையில் சி.ஐ.டி. விசாரணைகள் தொடரும் நிலையில், வெடிப் பொருட்கள் காணாமல் போன கல் குவாரிக்கு சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தன கல்லுடைப்பதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து கற் குவாரிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை தொழிலுக்காக பயன்படுத்தும் இடங்களில், அவற்றை மேற்பார்வை செய்யவென பொறிமுறை ஒன்றினை அமைக்க கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

சுற்றாடல் அமைச்சின் கீழ் ஓய்வுபெற்ற இரானுவ மேஜர் ஜெனரால் ஒருவரை இவ்வாறான இடங்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளில் அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிக்க மாவனெல்லை பகுதியின் இரு வேறு இடங்களில் இரு புத்தர் சிலைகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன. 

மாவனல்லை, ஹிங்குல பகுதியில் கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ள புத்தர் சிலையொன்றின் பாதுகாப்புக்காக போடப்பட்ட கண்ணாடி கடந்த 29 ஆம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கல் வீசி சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அச்சம்பவத்துக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அலுத்நுவர பகுதியில் உள்ள புத்தர் சிலையொன்றின் பாதுகாப்புக்காக போடப்பட்ட கண்ணாடியும் அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு அரிவித்துள்ளனர்.

இந்த சிலை சேதப்படுத்தல் விடயங்கள் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தர்வுக்கு அமைய, அவரின் நேரடி கட்டுப்பாட்டில் கேகாலை 9 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனையில் மாவனல்லை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழான குழுவும், கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவங்கள் பதிவான இடங்களுக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டு, அவை பகுப்பாய்வுச் செய்யப்பட்டுள்ளன. 

குறித்த அறிக்கை விரைவில் கிடைக்கவுள்ள நிலையில், இதுவரை 30 இற்கும் அதிகமானோரின் வாக்கு மூலங்களை பொலிசார் பதிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னரும் இவ்வாறான புத்தர் சிலைகள் மீதான கல் வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமையும், மாவனல்லை, ஹிங்குல பகுதியில் கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ள புத்தர் சிலை அப்போதும் அடிப்படைவாதிகளின் இலக்காக இருந்திருந்தமையும், இந்த கல்வீச்சு தாக்குதல்கள் குறித்து சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடையே பல்வேறு அச்சங்களை தோற்றுவித்துள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதேசத்தின் சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை தனிப் பொலிஸ் படை ஆராயும் நிலையில், இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்த முடியாது எனவும் பிரதேசத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். எவ்வாறாயினும், சிலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த சிலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வெடி பொருள் காணாமல் போன விடயம் என்பவற்றுக்கு இடையே தொடர்புகள் உள்ளதா?, அவை வெவ்வேறு சம்பவங்களா?, அவற்றின் பின்னணி என்ன என ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment