2021 ஆம் வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை இடம்பெறுகின்றது - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

2021 ஆம் வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை இடம்பெறுகின்றது

(எம்.ஆர்.எம்.வஸீம்)

2021 ஆம் வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை இடம்பெறுகின்றது. அதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்படிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய வருடத்துக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூட இருக்கின்றது. அதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. 

அத்துடன் பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்களும் முழுமையாக செயற்படுவதுடன், கொவிட்-19 சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்களின் கீழ் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

மேலும் பாராளுமன்ற பணியாளர்களில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இந்தப் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்று நோய் உறுதி செய்யப்படவில்லை.

அத்துடன் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஜனவரி 08ஆம் திகதி வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

ஜனவரி 05 ஆம் திகதி கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளன.

அத்துடன் ஜனவரி 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad