குருநாகல் மாகாண பொது வைத்தியசாலை அதிநவீன வைத்தியசாலையாக புதிதாக நிர்மாணிக்கப்படும் - கடந்த அரசாங்கத்தில் 2,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

குருநாகல் மாகாண பொது வைத்தியசாலை அதிநவீன வைத்தியசாலையாக புதிதாக நிர்மாணிக்கப்படும் - கடந்த அரசாங்கத்தில் 2,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

குருநாகல் மாகாண பொது வைத்தியசாலை அதிநவீன வைத்தியசாலையாக புதிதாக நிர்மாணித்துத்தரப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாகாண பொது வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு குருநாகல் மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய வைத்தியசாலையின் நர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை குருநாகல் பொது வைத்தியசாலையில் காணப்படும் வைத்திய, தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையை மற்ற மருத்துவமனைகளுக்கு இணையாக உடனடியாக பூர்த்தி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சிக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய குருநாகல் மருத்துவமனையில் காணப்படும் வைத்திய, தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலை என்ற போதிலும் குருநாகல் பொது வைத்தியசாலை மாகாண பொது வைத்தியசாலையாகவே செயல்பட்டு வருவது குறித்து இதன்போது தெரியவந்தது.

ஆண்டிற்கு சுமார் 1.2 மில்லியன் நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன், 2019 தரவுகளின்படி, அந்த ஆண்டில் மட்டும் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 630,000 ஆகும். சுமார் 1,000 புதிய பிறப்புகள் மாதந்தோறும் நிகழ்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக குருநாகல் பொது வைத்தியசாலை நாட்டின் மூன்றாவது பெரிய மருத்துவமனையாக உள்ளது. 2374 படுக்கைகளை கொண்ட இந்த வைத்தியசாலையில் ஆண்டுக்கு சுமார் 18,000 அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

06 அறுவை சிகிச்சை நிலையங்களை கொண்டு இந்த இலக்கை அடைந்துள்ளதாக குருநாகல் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா தெரிவித்தார்.

புதிய மகப்பேறு அறை வளாகம் மற்றும் விசேட அறுவை சிகிச்சை பிரிவுகள், எலும்பியல் மற்றும் கண் மருத்துவம் பிரிவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பிரிவு உள்ளிட்ட ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் வைத்தியசாலையின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டம் குறித்து குருநாகல் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சந்தன கெதன்கமுவ விளக்கமளித்தார்.

ஐந்து முக்கிய வீதிகள் இணையும் இடத்தில் குருநாகல் வைத்தியசாலையின் அமைவிடம் காணப்படுவதால், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக இவ்வைத்தியசாலைக்கு வருகை தருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதேனியா தெரிவித்தார்.

தற்போதுள்ள வைத்தியசாலையை நவீனமயப்படுத்துவதை விட, நகரத்திற்கு ஏற்ற புதிய வைத்தியசாலை ஒன்றே அவசியமானதாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ குருநாகலில் ஒரு புதிய வைத்தியசாலையை அமைக்குமாறு கோரினார்.

அதன்படி, ஒரு புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாக பிரதமர் கூறியதோடு, வைத்தியசாலைக்கான அடிப்படை திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் தோராயமான மதிப்பீட்டில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தின் போது விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனுருத்த பாதேனியா விசேட வெளிப்படுத்தலொன்றை முன்வைத்தார். 

நாட்டில் 1948-2008 முதல் 600 ஆக வரையறுக்கப்பட்டிருந்த மொத்த நிபுணர்களின் எண்ணிக்கை 2008-2015 காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இது 2100 ஆக உயர்த்தப்பட்டதுடன், 2015-2020 காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 2086 ஆக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தின்போது மருத்துவ நியமனங்கள் தாமதமானதால் 4,000 மருத்துவர்களில் 2,000 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர், அல்லது என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னர் இரண்டு அல்லது மூன்றாக இருந்தபோதிலும், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 74-78 ஆக உயர்ந்துள்ளது என்று வைத்தியர் பாதெனிய தெரிவித்ததுடன், இரசாயன பொருட்கள் பாவனையுடனான வேளாண்மையை நிறுத்தி இயற்கை வேளாண்மைக்கு ஊக்குவிக்குமாறு கௌரவ பிரதமரின் வேண்டுகோள் விடுத்தார்.

வாரியபொல, நிகவெரடிய, கல்கமுவ, பொல்பிதிகம உள்ளிட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.அது தொடர்பான ஆவணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கௌரவ பிரதமரிடம் கையளித்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான பவித்ரா வன்னிஆராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜயரத்ன ஹேரத், சாந்த பண்டார, வை.ஜீ.ரத்னசேகர, அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புர, சமன்பிரிய ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad