ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை ஏன் எடுத்தார்? - சம்பந்தன் இனியாவது சொல்வாரா?, ஆனந்த சங்கரி கேள்வி - News View

Breaking

Post Top Ad

Saturday, December 5, 2020

ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை ஏன் எடுத்தார்? - சம்பந்தன் இனியாவது சொல்வாரா?, ஆனந்த சங்கரி கேள்வி

ஜனாதிபதித் தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை என்ன நலனை கருத்தில் கொண்டு எடுத்தாரென்பதை இன்றேக்கேனும் இரா. சம்பந்தன் வெளிவிடுவாரா? என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது யுத்தத்தை தான் திட்டமிட்டு முடித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பில் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எல்லாவற்றையும் கலைத்து விடுவதே சிறந்ததாகும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உண்மைகள் அழிவதில்லை! என்றோ ஒரு நாள் வெளிவந்தே ஆக வேண்டுமென்பதே உலகளாவிய ரீதியில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

பல உண்மைகள் வெளிவர வேண்டியவையாக இருந்தும் திட்டமிட்ட சிலரின் செயலால் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகின்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, கடந்த 03ஆம் திகதி தன் வீரச் செயல்களில் ஒன்றாக ஒரு பெரும் இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

பல விடயங்களில் ஒன்றாகிய யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டு வருவதாக தான் உறுதியளித்ததாகவும், அதனை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

சரி பிழை ஒரு புறமிருக்க வெளிப்படையாக அவர் கூறியதை பாராட்ட வேண்டும். அரசியல் புரிந்தவர்களுக்கு இது பெரிய புதினமல்ல. ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தன் ஐயா, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரக்கக் கூறிய கருத்து 'எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொன்சேக்காவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.' என பொன்சேக்கா யுத்தம் முடிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேளையில் சம்பந்தனால் உரக்கக் கூறப்பட்டது.

நான் கூறும் விடயங்கள் பல தீர்க்க தரிசனமாக அமைந்துள்ளன. தமிழரசுக் கட்சிக்கு மீள உயிர் கொடுத்த சம்பந்தன், சேனாதிராஜா போன்றவர்கள் தந்தை செல்வநாயகத்திற்கும் பார்க்க தமிழர்களுக்கு பெரும் தூரோகம் இழைத்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

பாராளுமன்றத்தில் சிலரால் கூறப்பட்டது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பும், நான் கூறிவருவது போல தமிழரசுக் கட்சியும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்று நான் கூறிவரும் கருத்திற்கு வலூவூட்டக் கூடிய உண்மைகள் பல வெளிக்கொண்டு வரவுள்ளேன். அதற்கு முன்பே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எல்லாவற்றையும் கலைத்து விடுவதே சிறந்ததாகும்.

என்ன நலனை கருத்தில் கொண்டு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கும் முடிவை எடுத்தாரெனன இன்றேக்கேனும் சம்பந்தன் வெளிவிடுவாரா? என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad