ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் நிறைவு, ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபரிடம், விரைவில் வழக்கு தாக்கல், பாராளுமன்றில் உள்ளவர்கள்கூட கைதாகலாம் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Saturday, December 5, 2020

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் நிறைவு, ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபரிடம், விரைவில் வழக்கு தாக்கல், பாராளுமன்றில் உள்ளவர்கள்கூட கைதாகலாம் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 08 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. 257 பேர் விளக்கமறியலிலுள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி சட்டமா அதிபர்தான் வழக்கு தொடுக்க வேண்டும். அதனை துரிதப்படுத்துமாறு அவரை எதிர்வரும் திங்கட்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேனென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறியவை வருமாறு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் சி.ஐ.டி., ரி.ஐ.டியின் கீழ் 171 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 257 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

08 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மனிதப் படுகொலைகள், சூழ்ச்சித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரே வழக்கு தொடுக்க வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையும் வெளிவரவுள்ளது.

சட்டமா அதிபரை திங்கட்கிழமை நேரில் சந்திக்கவுள்ளேன். அதன்போது இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பேன். எஞ்சிய ஓர் ஆவணவமும் ஒப்படைக்கப்படும்.

அவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பணம் வழங்கியவர்கள் யார்?, சூத்திரதாரிகள் யார்? என்பது தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியவரும். வழக்கு விசாரணைகள் நடைபெறுகையில் இந்த பாராளுமன்றத்தில் உள்ளவர்கள்கூட கைதாகலாம். சில இரகசிய தகவல்களை வெளியிட முடியாது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் நேரில் சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தவுள்ளேன். அதேவேளை, கடந்த அரசாங்கம் புலனாய்வுதுறையை பலவீனப்படுத்தியதாலேயே இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது என்றார்.

ஷம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad