சஹ்ரானும் அவரது குழு மட்டுமே என நாம் நம்ப முட்டாள்கள் அல்ல ! ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

சஹ்ரானும் அவரது குழு மட்டுமே என நாம் நம்ப முட்டாள்கள் அல்ல ! ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதும், அதனை நடைமுறைப்படுத்தியதும் சஹ்ரானும் அவரது குழுவும் மட்டுமே என நம்பிக்கொண்டிருக்க நாம் முட்டாள்கள் அல்ல. இந்த தாக்குதலில் சூத்திரதாரிகள் யார், இவர்களை இயக்கியது யார், இவர்களுக்கும் புலனாய்வு துறைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இந்தியாவுடன் இவர்களின் தொடர்பு என்ன என்பதெல்லாம் கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் அமைவிடம் மற்றும் தற்போதைய வியாபார கொள்கையுடன் இலங்கையின் கடற்படையை முன்னிறுத்திய புதிய வேலைத்திட்டமொன்றை இலங்கை முன்னெடுக்க வேண்டும், இலங்கைக்கு மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றது.

அன்று எவ்வாறு விடுதலைப் புலிகள் உருவாகியதோ அதேபோன்று மீண்டும் சில நிலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. உலக நாடுகள் அனைத்துமே இன்று தமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாம் இனியும் வல்லரசுகளில் தங்கியிருக்காது இலங்கைக்கென்ற நடுநிலையான சர்வதேச கொள்கையுடன் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும்.

பயங்கரவாத தாக்குதல் வெறுமனே தற்கொலை குண்டுத் தாக்குதல், ஆயுதங்களை, அல்லது வாகனங்களில் மோதி கொள்வது என்பதாக மட்டுமே இருக்காது. இன்றைய நவீன யுகத்தில் ட்ரோன் தாக்குதல்கள், ஆளில்லா தாக்குதல்கள் நடத்தப்படலாம். பலமான பாதுகாப்பை கொண்டுள்ள ஈரான் போன்ற நாடுகளில் கூட இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது நாடு கவனமாக இவற்றை கையாள வேண்டும்.

கடந்த ஆண்டு சஹ்ரானின் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது, அதனை சாட்டாக வைத்து இப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தனர். இப்போது உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் உள்ளது. இந்த தாக்குதலை திட்டமிட்டதும், அதனை நடைமுறைப்படுத்தியதும் சஹ்ரானும் அவரது குழுவும் மட்டுமே என நினைத்துக் கொண்டிருக்க நாம் முட்டாள்கள் அல்ல. 

எனவே இந்த தாக்குதலில் பிரதானிகள் யார், இவர்களின் தொடர்பு என்ன? யார் இவர்களை இயக்கியது, இவர்களுக்கும் புலனாய்வு துறைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இந்தியாவுடன் இவர்களின் தொடர்பு என்ன என்பதெல்லாம் கண்டறிய வேண்டும். அப்போதுதான் இந்த தாக்குதல்கள் போன்று வேறு எதுவும் நடக்காது தடுக்க முடியும்.

மத்திய வங்கி கொள்ளை குறித்து இந்த ஆட்சியாளர்கள் பேசினர், அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதாக கூறினார். கே.பியின் செவியில் பிடித்து இழுந்து வந்த எமக்கு அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வது பெரிய வேலையில்லை என்றனர். இவ்வாறு கூறியவர்கள் ஆட்சி அமைத்து ஒரு ஆண்டும் முடிந்துவிட்டது. 

மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டு என்னவானது? வெறுமனே அரசியல் காரணிகளுக்காக இந்த குற்றங்களை பயன்படுத்திக் கொள்ளாது உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.

No comments:

Post a Comment