'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்' : மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு - News View

Breaking

Post Top Ad

Thursday, December 3, 2020

'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்' : மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு

(எம்.எப்.எம்.பஸீர்) 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 

மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முன்வைத்த சாட்சியங்களைத் தொடர்ந்து, இவ்வாறு குறித்த பிக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 

அவரது சாட்சியத்தின் ஊடாக விசாரணை அதிகாரிகளின் சாட்சியம் மேலும் உறுதியானது. 'என்னை தாக்கியதாக தெரிவிக்குமாறு, விகாரைக்கு வந்த ஜகத் மாமா தெரிவித்தார். அதன் பேரிலேயே நான் அவ்வாறு கூறினேன்.' என சாட்சியம் வழங்கும் போது குறித்த இளம் பிக்கு தெரிவித்தார். 

மினுவாங்கொடை பொல்வத்தை எனும் கிராமத்தில் அமைந்துள்ள விகாரையில் இருந்த இளம் பிக்கு மீது, கல் ஒலுவ எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தாக்குதல் நடாத்தியதாக குறித்த பொய்யான தகவல் பரப்பப்பட்டிருந்தது. இதனால் மினுவாங்கொடையில் வன்முறைகள் வெடித்ததாக சாட்சிகள் ஊடாக தெளிவாகின.

No comments:

Post a Comment

Post Bottom Ad