பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள 50 வீதமானவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது - பந்துல குணவர்த்தன - News View

Breaking

Post Top Ad

Monday, December 7, 2020

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள 50 வீதமானவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது - பந்துல குணவர்த்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

2020ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள 30 ஆயிரம் மாணவர்களில் 50 வீதமானவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். 

பாராளுமன்றில் இன்று திங்கட்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஆளுங்கட்சி எம்.பி. சாந்த பண்டாரவால் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலுக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் அரச பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அப்பால் உயர்தரப் பரீட்சை சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் நிதி வழங்கப்படுகிறது. மஹபொல புலமைப்பரிசிலுக்கு தகுதியான மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்கிறது. 

வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் கோரிக்கையின் பிரகாரம் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மஹபொல நிதியத்திற்கு அனுப்பி வைக்கின்றது. 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து அரச பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கே மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள் மற்றும் ஓரளவு சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. 

அதன் பிரகாரம் 2020 ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு 30 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்தி 969 பேருக்கு, அதாவது நூற்றுக்கு 50 வீதமானவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. 

சிறந்த பெறுபேறுகளுக்கான புலமைப்பரிசிலாக 5050 ரூபா வழங்கப்படுகிறது. மஹபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுபவர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் சிறந்த பெறுபேறுகளுக்கான புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். சிறந்த பெறுபேறுகளுக்கான புலமைப்பரிசில் அனைத்து பாடங்களுக்கும் சமமாக வழங்கப்படுகிறது. 

இதேவேளை, சாதாரணமான புலமைப்பரிசில்களாக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படுகிறது. இதற்காக மஹபொல நிதியத்தின் ஊடாக 2550 ரூபா வழங்கப்படுகிறது. திறைசேரி நிதியத்தின் ஊடாக 2450 ரூபாவும் வழங்கப்படுகிறது. 

வருடத்துக்கு 5 இலட்சத்திற்கும் குறைவான வருமானத்தை பெறும் குடும்பங்களின் மாணவர்கள் மஹபொல புலமைப்பரிசிலுக்கான தகுதியை இழக்கும் சந்தர்ப்பங்களில் உயர்த்தரத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட வெட்டுப் புள்ளியின் பிரகாரம் மஹபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad