பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் பயணம் - ஜெருசலமில் பிரதமர் பெஞ்சமின் மற்றும் மைக் பொம்பியோவுடன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் பயணம் - ஜெருசலமில் பிரதமர் பெஞ்சமின் மற்றும் மைக் பொம்பியோவுடன் சந்திப்பு

பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப் போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன. 

அதன் பயனாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவுதி அரேபியா வழியாக விமானப் போக்குவரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும், தொழில்நுட்பம், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் பல்வேறு முதலீடுகள் செய்யும் பணியிலும் இஸ்ரேல் - பஹ்ரைன் - அமீரகம் ஈடுபட்டு வருகிறது. 

மேலும், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமில் கூடிய விரைவில் தங்கள் நாட்டு தூதரகங்களை அமைக்கவும் பஹ்ரைன், அமீரகம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாடுகளுக்கு இடையே நிலையை சீரடைந்ததை தொடர்ந்து அரசுமுறை பயணமாக பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்டில்லாடிப் அல்-சயானி நேற்று இஸ்ரேல் சென்றடைந்தார். 

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இஸ்ரேலில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் அரபு வளைகுடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. 

இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பஹ்ரைன் அமைச்சர் அல்-சயானி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவை சந்தித்தார். 

இந்த சந்திப்பு இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பின் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அதில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினைக்கு இரு நாடுகள் என்பதன் மூலம் தீர்வுகான வேண்டும் என பஹ்ரைன் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பஹ்ரைன் - இஸ்ரேல் நாடுகளின் தூதரகங்கள் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார். 

பஹ்ரைனை தொடர்ந்து கூடிய விரைவில் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய தலைவர்கள் அரசுமுறை பயணமாக விரைவில் இஸ்ரேல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பொம்பியோ மேற்கு கரை பகுதியில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment