ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண் பிடிபட்டார்! - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண் பிடிபட்டார்!

கடந்த வியாழக்கிழமை (19) இரவு  IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரான பெண்ணை, பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இன்றிரவு (21) எஹலியகொட பொலிஸ் பிரிவிலுள்ள, ஹிந்துரங்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள சிறிய காட்டுப் பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தான் IDH வைத்தியசாலையிலிருந்து முச்சக்கர வண்டி மற்றும், பஸ்ஸில் ஏறி எஹலியகொடவிற்கு வந்ததாக, தெரிவித்துள்ளார்.

அவரது தகவல் தொடர்பில விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிந்து சுகாதாரப் பிரிவின் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது எனத் தெரிந்தும், எவரேனும் அவருக்கு உதவி ஒத்தாசை, புகலிடம் வழங்கியிருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண் பொலன்னறுவை, கல்லேல்ல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குருவிட்ட சிறையிலிருந்த குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தனது 2 1/2 வயது மகனுடன் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மகனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் (21) குறித்த பெண்ணின் மகன், எஹலியகொடவிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டதோடு, அவரது தாய் குறித்த வீட்டாரிடம் அவரை ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவர்களுடன் தொடர்புடைய 20 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, குறித்த குழந்தை அவரது தந்தையுடன் இன்று பிற்பகல் சுகாதாரப் பிரிவினரால் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment