நல்லாட்சி அரசாங்கத்தினால் செய்ய முடியாமல்போன ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை நாங்கள் செய்துள்ளோம் - மருதபாண்டி ராமேஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

நல்லாட்சி அரசாங்கத்தினால் செய்ய முடியாமல்போன ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை நாங்கள் செய்துள்ளோம் - மருதபாண்டி ராமேஸ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

நல்லாட்சி அரசாங்கத்தினால் செய்ய முடியாமல்போன ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை நாங்கள் செய்துள்ளோம். அதனை நாங்கள் எப்படியாவது பெற்றுக் கொடுத்தே தீருவோம் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் செய்ய முடியாததை நாம் செய்து காட்டியுள்ளோம். பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது மறைந்த ஆறுமுகம் தொண்டமானினதும் அமைச்சர் ஜீவன் தொண்டமானினதும் பெரும் முயற்சியாலும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினால் மட்டுமே நடந்தது என்பதை கடந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் கடந்த நான்கரை வருடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவைக்கூட பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது. அந்த மக்களை ஏமாற்றியே வந்தனர்.

அதேபோன்று மலையகத்துக்கு பாடசாலை வசதி மற்றும் ஆசியரியர் பற்றாக்குறை இருப்பது தொடர்பாக நாங்கள் பிரதமருடன் கலந்துரையாடியதன் பயனாக மூவாயிரம் ஆசிரியர் நியமனத்தினை ஜனாதிபதி பெற்றுக் கொடுத்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவை ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

நாம் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், நிச்சயமாக நாம் இந்த 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம். இது தொடர்பாக பொருந்தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி இருக்கின்றோம். அதுபோல் நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு என்ன செய்துகொடுத்தீர்கள் என கேட்கின்றோம்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் மக்கள் என்ற வகையில் பெருந்தோட்டத்துறை மக்களுக்காக வேலை செய்த ஒரேயொரு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினதும் தற்போதய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினதும் ஆட்சியில் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad