உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் தற்காலிக வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

இன்று (12) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், நிரோயன் றுசாந்தன் எனும் சிறுவனே பலியாகியுள்ளான்.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக அங்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சிறுவனின் தாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்ததாகவும், சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் உணவு உட்கொண்டிருந்துள்ளதாகவும், அவ்வேளையில் திடீரென வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். எனினும். வைத்தியசாலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பான பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச சபையினால் குறித்த வடிகாணமைப்பு வசதியினை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று ஒரு சிறுவனின் உயிர் பிரிந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படாமையினாலேயே நிரந்தர வீட்டுக்குள் செல்ல முடியாது போயுள்ளதாகவும், அவர்களிற்கான நிரந்தர வீடு அமைப்பதற்கான மிகுதி பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

(யது பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன், முருகையான தமிழ்செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad