ஏப்ரல் தாக்குதல், பிணைமுறி மோசடி தொடர்பில் யாரையும் கைது செய்யும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை : லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

ஏப்ரல் தாக்குதல், பிணைமுறி மோசடி தொடர்பில் யாரையும் கைது செய்யும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை : லக்ஷ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஏப்ரல் தாக்குதல் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் ஒரு வருடம் கடந்தும் இவை தொடர்பில் யாரையும் கைது செய்யவில்லை. அந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி இவை இரண்டையும் காட்டியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மத்திய வங்கி பிணைமுறியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் இவர்கள் வழக்கு தொடுக்கவில்லை.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், இவர்களின் பிரதான தேர்தல் பிரசாரமாக இருந்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது. ஒரு வருடமாகியும் யாரையாவது கைது செய்தார்களா? இது தொடர் நாடகம் போன்றது. 

விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி வருகின்றார். பின்னர் பொலிஸ்மா அதிபர் வருகின்றார். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் வருகின்றார். ஆனால் குண்டை வைத்தவர்களை கண்டுபிடித்தீர்களா என்றே கர்த்தினால் கேட்கின்றார்.

குண்டுதாரிகளை இவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த தேவையும் இவர்களுக்கு இல்லை. ஏனெனில் உயிர்த்த ஞாயிரு தாக்குதல் காரணமாகவே இவர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். 

தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்துக்குள் கட்டுவாப்பிடியவுக்கு சென்று, நாட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நான் போட்டியிடுகின்றேன் என தெரிவித்தே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் இதுவரையும் யாரையும் கைது செய்யவில்லை.

மேலும், வரவு செலவு திட்டத்தில் மக்கள் எதிர்பார்ப்பது நிவாரணமாகும். ஆனால் எந்த நிவாரணமும் மக்களுக்கு இல்லை. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் வரிகுறைப்பை மேற்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளித்த கம்பனிகளுக்கு லாபம் பெற்றுக் கொடுத்தது. 

அதனால் அரசாங்கத்தின் வருமானம் 600 மில்லியன் ரூபா இல்லாமல்போனது. அதனால்தான் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாமல் போனது. வரி குறைப்பினாலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவிலலை.

அத்தோடு, தற்போதும் அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பு இல்லை. அதனால்தான் தேசிய பொருளாதாரம் தொடர்பில் கதைக்கின்றனர். அரசின் வருமானத்தை 400 பில்லியனால் இல்லாமலாக்கிக் கொண்டார்கள். 

அதனால் தற்போது வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. பொருட்களை கொண்டுவர முடியாது. 70/78 காலம்போன்று மீண்டும் பொருட்களை வரிசையில் இருந்து பெற்றுக் கொள்ளும் யுகத்துக்கே செல்ல முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment