பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றவே வரவு செலவு திட்டத்தில் கடன் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது - வெளிநாடுகளிலிருந்து 46,250 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர் : தினேஷ் குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றவே வரவு செலவு திட்டத்தில் கடன் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது - வெளிநாடுகளிலிருந்து 46,250 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர் : தினேஷ் குணவர்த்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டத்துக்கே வரவு செலவு திட்டத்தில் கடன் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் 46 ஆயிரத்தி 250 பேர் இதுவரை அழைத்து வரப்பட்டிருக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் அவசியமாகும். நாம் நாட்டை கையளித்திருந்த தருணத்தில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் வரை உயர்த்தியிருந்தோம். ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பின்னர் பொருளாதார வளர்ச்சியானது 2.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அதனால்தான் கடந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

முழு உலகத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொவிட் தொற்றினால் எமது நாடும் அதற்குள் சிக்கிக் கொண்டுள்ளது. என்றாலும் இந்த நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் உலக சுகாதார அமைப்புடன் கலந்துரையாடி மனித உயிர்களை பாதுகாக்க முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உறுதியில் செயற்பட்டார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எமது நாட்டில் கொவிட்டினால் ஏற்படும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் எதிர்க்கட்சி நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் என்னதான் விமர்சித்தாலும் கொவிட் காரணமாக முழு உலகமும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றது. இது புதிய வைரஸ். அதனால் எமது நாடும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்திருக்கின்றது. அதனால் புதிதாக சிந்தித்து எமது நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே பிரதமர் வரவு செலவு திட்டத்தில் கடன் யோசனையை முன்வைத்திருக்கின்றார். கடன் தொகை அதிகமாக இருக்கலாம்.

மேலும் எமது நாட்டில் இருந்து வெளிநாடுகளில் 13 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம் பெயர்ந்து வாழுகின்றனர். கொவிட் காரணமாக அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த நிலையில் இதுவரை 126 நாடுகளில் இருந்து 46 ஆயிரத்தி 250 பேர் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி அந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி அங்கிருக்கும் எமது நாட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சியினர் விமர்சித்துக் கொண்டு, அதனை எப்படி வழங்கப் போகின்றது என கேள்வி கேட்கின்றனர். எதிர்க்கட்சி ஆயிரம் ரூபா சம்பள உயர்வை விமர்சிக்காமல் அதனை பெற்றுக் கொடுக்க ஒத்துழைப்பு வழங்க முன்வ ரவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment