1000 ரூபா சம்பளத்தை வழங்கப் போவதில்லை - பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

1000 ரூபா சம்பளத்தை வழங்கப் போவதில்லை - பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு

அடுத்த வருடத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு தினம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பட்ஜெட் முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தங்களை அணுகவில்லை என்று பெருந்தோட்டக் கம்பனிகள் கூறியிருக்கின்றன.

அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படாத பட்சதத்தில் 1000 ரூபா தினச் சம்பளத்தை வழங்குவதற்கு இணங்குவதை தாங்கள் தற்போது அடைகின்ற பாரியளவு நட்டங்கள் தடுக்கும் என்றும் கம்பனிகள் தெரிவித்திருக்கின்றன.

அதேவேளை, நேற்று முன்தினம் செவ்வாயன்று இணையவழி செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை தோடடத்துரைமார் சங்கம் தங்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் மாற்று சம்பளத் திட்டத்தை தோட்டத் தொழிற் சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியது.

தாங்கள் முன்வைத்திருக்கும் சம்பளத்திட்ட யோசனை தோட்டத் தொழிலாளர்கள் தினமொன்றுக்கு 1000 ரூபாவையும் விட கூடுதலாக சம்பாதிப்பதை உறுதி செய்யும். அது அவர்களின் தொழில் ஆற்றலில் தங்கியிருக்கிறது என்றும் துரைமார் சங்கம் கூறுகிறது.

அந்த யோசனை ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டதால், அரசாங்கமும் தொழிற் சங்கங்களும் திரும்வும் ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டபோது துரைமார் சங்க பேச்சாளரான கலாநிதி ரொஷான் இராஜதுரை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை என்று பதிலளித்தார்.

தங்களது மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ளத் தவறினால் பெருந்தோட்டத் தொழில்துறை மேலும் பாதிக்கப்படும் என்று எச்சரித்த இராஜதுரை, கடந்த 28 வருடங்களாக இலங்கையின் முழுத் தேயிலையிலும் சுமார் 30 சதவீதத்தை உற்பத்தி செய்யும் பிராந்திய தோட்டக் கம்பனிகளும் தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களின் தினச் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன என்று சொன்னார்.

ஆனால், புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் 2021 ஜனவரியில் நடைபெறவிருக்கும் நிலையில் வேறு நாடுகளில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்படுகின்ற விவசாய - வர்த்தக வகை மாதிரிகளின் வழியில் அர்த்தமுடையதும் முற்போக்கானதுமான சீர்திருத்தங்களை பெருந்தோட்டத் துறையில் அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என்று துரைமார் சங்கத்தின் தலைவரான பாதியா புல்முல்ல வாதிடுகிறார்.

“இதுவே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே மார்க்கம். தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால நலன்களில் அக்கறை கொண்ட சகல தரப்பினரும் 1000 ரூபாவுக்கும் கூடுதலான வேதனத்தை தொழிலாளர்கள் பெறுவதற்கு வழிவகுக்கக் கூடிய எமது மாற்று யோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எமது யோசனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் தோட்டத் தொழிலாளர்கள் மாதாந்தம் 55,000 ரூபா தொடக்கம் 70,000 ரூபாவரை சம்பாதிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad