கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சுகாதார ஆலோசனை கோவை வௌியீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சுகாதார ஆலோசனை கோவை வௌியீடு

நாளை திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சுகாதார ஆலோசனை கோவை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுக்கு எதிரான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதனால், பரீட்சார்த்திகள் அனைவரையும் காலை 7.30 மணியளவில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, பரீட்சை அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடையளிப்பதற்காக வழங்கப்படும் 03 மணித்தியாலங்களைத் தவிர, கேள்விகளைத் தெரிவு செய்வதற்காக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனை கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணக்கியல், பொறியியல், தொழில்நுட்பவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்காக மாத்திரமே கணிப் பொறிகளை பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகளை வைத்திருத்தல், விடைகளை மற்றையவர்களுக்கு வழங்குதல், ஏனையோருக்கு உதவுதல் மற்றும் உதவி பெறுதல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால் குறித்த பரீட்சார்த்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உயர் தரப் பரீட்சை நிலையங்களின் இணைப்புக்காக மேலதிக இணைப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இம்முறை பரீட்சை இடம்பெறுவதனால், பரீட்சை மத்திய நிலையங்களுக்கான சுகாதார வசதிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து பரீட்சை மத்திய நிலைய சூழலில் கிருமி நீக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் என்பவற்றுக்காக மேலதிக இணைப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்துடனும் தொடர்புடைய பாடசாலையின் அதிபர்கள், உப அதிபர்கள் அல்லது சிரேஷ்ட ஆசிரியர்கள் மேலதிக இணைப்பதிகாரியாக செயற்படுவார்களென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment