வல்லரசு நாடுகள் நடு வீதியில் நின்று அழும் நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் இலங்கையின் சேவை சிறப்பாக உள்ளது - தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா புகழாரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

வல்லரசு நாடுகள் நடு வீதியில் நின்று அழும் நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் இலங்கையின் சேவை சிறப்பாக உள்ளது - தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா புகழாரம்

நூருல் ஹுதா உமர்

உலக வழிகாட்டிகள், பணக்காரர்கள் என்று கூறப்படும் வல்லரசு நாடுகள் அந்த நாட்டு மக்களுக்கு தேவையான போதியளவிலான சுகாதார வசதிகளை செய்து கொடுக்க தவறியமையால் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டு நடு வீதிகளில் நின்று அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுதான் செய்தாலும் எமது நாட்டின் உருவான அரசாங்கங்கள் மக்களை வாழ வைப்பதற்கான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்கள். அதிலும் விசேடமாக சுகாதாரத்துறை. நாங்கள் இன்று இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் இலவச மருத்துவமும் எமது வைத்தியசாலைகளும் இலவச கல்வியுமே என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் வள நிலையத்தில் நடைபெற்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தில் 257 பயனாளிகளுக்கு நியமனம் வழங்கும் வைபகத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் பேசிய அவர், எமது நாட்டில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இலவச உணவு, இலவச சீருடை வழங்கும் இந்த நாட்டில்தான் விவசாயிகளுக்கு இலவச உரமும் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு வளம் செழிக்கும் நாடாக இலங்கையை பார்க்கிறோம். வறுமையை ஒழிக்க சமூர்த்தி என்றும் வேறு பெயர்களிலும் ஏதாவது ஒரு திட்டம் இந்த நாட்டில் நடைமுறையில் இருந்தே வருகிறது. அதனடிப்படையிலையே ஜனாதிபதியின் எண்ணத்தில் உருவான சகல வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் எனும் நோக்கில் உருவான ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.

ஆகக்குறைந்தது சாதாரண தரம் படித்தால் மட்டுமே அரச உத்தியோகத்தை தேடும் காலமிருந்தது. ஆனால் காலம் இப்போது மாறி போகிருக்கிறது. இப்போது எல்லாம் நவீனமயப்படுத்தப்பட்ட பின்னர் மனித வளத்தை விட இயந்திரங்களே நிரம்பியிருக்கிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வில் வெளிச்சம் கொடுக்க இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. நன்றாக கல்வி கற்று பட்டம் முடித்தவர்கள் அரச உத்தியோகத்தை எதிர்பார்ப்பதை விடுத்து உங்களின் தொழில் திறமைகளை கொண்டு பலருக்கும் தொழில் வழங்கும் தொழில் முனைவர்களாக உங்களை மாற்றி கொள்ள வேண்டும். எதிர்காலத்தை கணித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

வெளிநாட்டில் தொழில் செய்து விட்டு பணத்துடன் நாடு திரும்பும் எமது பிள்ளைகள் தொழில் செய்வதில் முதலீடு செய்கிறார்கள். எமது நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் ஏற்றாற்போல தொழில்களை தெரிவு செய்தால் நிச்சயம் தொழிலில் வெல்ல முடியும். கடந்த நல்லாட்சி அரசில் அவர்களும் கடுமையாக பலதையும் எமக்கு செய்து காட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் செய்தவைகள் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உகந்ததா என்பதே இங்கு பிரச்சினை. அவர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தார்கள், பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுப்பதாக சொன்னார்கள். நீதிமன்றத்திற்கு சென்று இருந்தார்கள், வரலாற்றில் ஒரு சமூகத்தை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தினார்கள். அப்படி எல்லாமே செய்தார்கள். இப்போது யார் குண்டை வைக்க துணை போனார், யார் பார்த்துக் கொண்டிருந்தார், யார் கலவரங்களை இயங்கினார்கள் என்று ஆணைக்குழுக்களில் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் ஆதரித்த அரசுக்கள் இந்த நாட்டுக்கு நல்லவற்றையே செய்தார்கள். மஹிந்த அரசில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியது, அபிவிருத்திகள், யுத்த வெற்றி என இறைமை நிறைந்த நாடாக இருந்தது.

இந்த நாட்டின் ஜனநாயக முதுகென்பை உடைத்து நாட்டை சீரழித்து சமநிலையை குழைத்து யாருக்கு அதிகாரம் என தினமும் ஒப்பாரி வைக்கும் நிலையிலையே கடந்த நல்லாட்சி காலங்களில் நாடு இருந்தது. 19 ஆம் திருத்தம் வந்த போது நிலையான அரசாங்கத்தை குலைக்க போகிறார்கள் எப்போது 2/3 பெரும்பான்மை அரசு உருவாகுமோ என பயந்தோம். இன்று அதை இல்லாமலாக்கி நிலையான, ஸ்திரமான ஆட்சியை உருவாக்கியுள்ளோம். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

தேசிய காங்கிரஸின் நீண்ட கால இலக்காக இருந்துவருவது சகல இன மக்களும் நிம்மதியாக வாழும் யாப்பை உருவாக்குவதே. பெரும் பணியான இந்த யாப்பு மாற்றம் உருவாக்கப்படல் வேண்டும். இந்த நாட்டில் வாழும் மக்களிடம் சிறுபான்மை பெரும்பான்மை என பேதங்களற்ற யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் கண்டுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment