அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் ஏன் சீனாவிற்கு கசப்பானது? - ஹேஷா விதானகே - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் ஏன் சீனாவிற்கு கசப்பானது? - ஹேஷா விதானகே

(செ.தேன்மொழி)

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் ஏன் சீனாவிற்கு கசப்பானது. அவ்வாறானால் இரு நாடுகளும் இலங்கையை கையாள முயற்சிக்கின்றனரா ? என்ற சந்தேகமும் உள்ளது. எனவே அரசாங்கம் வெளிப்படையாக குறித்த விஜயம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தனது சுயாதீன தன்மைக்கு சிக்கல் ஏற்படாத வகையில் சர்வதேச தொடர்பை பேணி வந்துள்ள போதிலும், சீனா மற்றும் அமெரிக்காவின் முகாமாக இலங்கையை மாற்ற முயற்சிப்பதானது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு சுட்டிகாட்டினார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான காரணம் என்ன? அவரது வருகை சீனாவுக்கு ஏன் மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தனது சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறந்த முறையில் சர்வதேசத்துடன் தொடர்பை பேணி வந்தது. தற்போது இடம்பெறும் சம்பவங்களை பார்க்கும் போது சீனா மற்றும் அமெரிக்காவின் முகாமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றார்களா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எதிர்காலத்தில் நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad