பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள வாழைச்சேனை மீன்பிடி - ஓர் உயரிய சபையின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள வாழைச்சேனை மீன்பிடி - ஓர் உயரிய சபையின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் கொரோனா!

ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை பிரதேசங்களில் கொரோனா நோயுடையவர்கள் பீ.சீ.ஆர். பரிசோதனை மூலம் முதல் கட்டமாக 11 பேரும் இரண்டாம் கட்டமாக 16 பேரும் இணங்காணப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் பிரதேசம் சுய தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்ததனை அடுத்து மக்கள் தத்தமது வீடுகளில் உள்ளனர். மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் முதலாவது தொடர்புடையவர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அவர்கள் சென்று வந்த வீடுகளிலுள்ளவர்கள் என 500 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கொரானா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தமது மார்க்க கடமைகளுக்காக பள்ளிவாயலுக்குள் சென்றதின் காரணமாகவும் மற்றும் பொது இடங்களில் நடமாடியதன் காரணமாகவும் இத்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை பிறைந்துறைந்சேனை செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவிலுள்ளவர்கள் அனேகமானவர்கள் மீன்பிடித் துறையையும் அதனோடு சார்ந்த தொழில்களில் நேரடியாக தொடர்புடையவர்களாவர்.

இதில் படகுகளில் மீன்பிடிக்க செல்பவர்கள், படகு ஓட்டுனர், மீனை வாங்கி விற்கும் வியாபாரிகள், மீன் வலைகள் பழுதடையும் போது அதனை பொருத்தி சீர் செய்யும் தொழிலாளி, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பிடிக்கும் மீனுக்கு பெட்டிகளை செய்யும் ஓடாவியார், படகுளை திருத்தும் தொழிலாளிகள், இம்மீன்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வாகன சாரதி மற்றும் அதனை ஏற்றி பறிக்கும் தொழிலாளி, மீனுக்கு ஜஸ் வைத்து பழுதடையாமல் பெட்டியில் அடுக்கும் தொழிலாளிகள், ஜஸ் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியரகள் என பலரும் இம்மீன்பிடித் தொழிலோடு தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். 

இவர்களின் வாழ்க்கை ஜீவனோபாயம் இம்மீன்பிடித் தொழிலினாலேயே இடம்பெறுகின்றது. இங்கு படகுகள் நங்கூரம் இடும் கரைகளை துறை என்று அழைப்பார்கள் அதில் ஒவ்வொரு பிரபல்யமான முதலாளிகள் பெயர்கள் அத்துறைகளுக்கு இடப்பட்டுள்ளன. மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலும் படகுகளை நங்கூரமிடப்படுகின்றன.

இவ்வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் பலர் ஒரு படகுகில் நான்கு பேர் அல்லது ஜந்து பேர் வெள்ளிக்கிழமை பின்னேரம் சென்று அடுத்த வாரம் வியாழக்கிழமை மீன் பிடித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கடலில் இருந்து மீன் பிடித்து தத்தமது கரைகளுக்கு திரும்புவர். 

இவர்கள் இக்கரைகளுக்கு திரும்பும் போது வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்கள் அத்துறையில் வரிசையாக காணப்படுவதும் அக்குடும்பங்களுக்கு தமது மீன்களில் குறிப்பிட்ட பகுதியை இலவசமாக வழங்கி வருவகின்றனர். 

கிட்டத்தட்ட ஒவ்வொரு கரைகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஏழைகளுக்கு இம்மீன்கள் ஒவ்வொரு வாரமும் இவ்வாறு இலவசமாக வழங்கப்படுவது இதன் சிறப்பம் சமாகும்.

படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தமது ஊதியத்தை கொண்டுவருகின்ற மீன்களை விற்று அதன் மூலமாக பெறும் இலாபத்தின் அடிப்படையில் பங்குகளாகவே பெறுவர். இது வாரந்தமாகவோ அல்லது மாதமாகவோ அம்மீன்பிடி கரைகளிலுள்ள படகு முதலாளி தொழிலாளியின் வாய் மொழி மூலமான உடன்படிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் .

அம்மீன் பிடிப்போர் தமது ஊதியத்தை வீடுகளின் தேவை ஏற்படுகின்ற போது இடையிடேயே கடன்களாகவும் பெற்று பின்னர் தமது பங்கு ஊதியத்திலிருந்து கழித்து கொள்வதும் வழமையாக இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது.

கடலில் பிடிக்கும் மீன்களை பெகலிககொட மீன்சந்தை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் தமது மீன்களை கொண்டு சென்று விற்றால்த்தான் இவர்களின் மேற்கூறிய தொழிலாளிகள் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல முடியும். அத்துடன் இம்மக்களின் கூடிய சிந்தனை தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் மீன்பிடித் தொழிலோடுதான் காணப்படுகின்றது. 

அவர்களுக்கு கொரோனா தொடர்பான அறிவுகள் இருந்தும் அதனோடு தொடர்புடைய சுகாதார விடயங்களை கடைப்பிடிக்கும் விடயங்கள் குறைவாகவே காணப்பட்டுள்ளது. அதாவது கொரோனா இலங்கையின் தெற்கு பிரதேசத்தை ஆட்கொண்டுள்ளது இது கிழக்கு மாகாணத்துக்கு வராது மற்றும் 20 அரசியல் சீர்திருத்ததிற்காக அரசினால் நடாத்தப்படும் ஒரு நடாகம் என சமூக வலைத்தளங்களில் இடப்பட்ட அரசியல் செய்திகள் என்பன இவர்களை கெரோனவிற்கான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறியிருந்தனர்.

இலங்கையில் முதல்கட்டமாக கொரோனா ஏற்பட்ட இப்பிரதேசங்களில் மிகவும் மும்முரமாக சுகாதார நடைமுறைகள் கடைப்பிடித்ததின் விளைவாக இந்த பிரதேசம் கொரோனவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. 

இலங்கை முதல்கட்டமாக கெரோனவிற்காக பிரதேசங்களை நாடாளவிய ரீதியில் மூடியிருந்த போதும் கூட இவ்வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மீன்கள் கொழும்புக்கு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாரின் அனுமதியுடன் அனுப்பட்டது. 

ஆனால் ஒருவரும் கொரோனாவாக அடையாளப்படுத்தப்படவில்லை அதற்கு மற்றுமொரு காரணம் பெகலியகொடவிலும் கடுமையான சுகாதார நடைமுறைகள் அப்போது கடைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையில் மீண்டும் கெரோனா தொடர்பான அச்சம் நீங்கி பாடசாலைகள் பொது நிறுவனங்கள் என வழமை நிலைமைக்கு திரும்பிய நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மினவாங்கொடையிலுள்ள பிரபல்யமான ஆடைத் தொழிச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால் அது அரசியல் செய்தியாக மாற்றப்பட்டதன் விளைவே இன்று நடாளாவிய ரீதியான பரம்பலுக்கு காரணம் எனலாம். 

அதனைத் தொடர்ந்து சன நெரிசலும் பல மாவட்டங்களிலிருந்தும் அன்றாடம் மீன்களை கொண்டு செல்லும் பெகலியகொட மீன் சந்தை இத்தொற்றுக்குள்ளாக்கப்பட்டதன் விளைவே இன்று மீன்பிடித் தொழிலை பிரதான தொழிலாக கொண்டு இயங்கும் கோறைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இன்று சமூக வலைத்தளங்களில் இம்மீன்பிடித் தொழிலளாளர்கள் மீதும் சுகாதார துறையினர் மீதும் மாறி மாறி குற்றம் சுமத்துவதனை அவதானிக்க முடிகின்றது. 

இலங்கை அரசாங்கம் பெகலியகொட மீன் சந்தை கடந்த ஒக்டோர் 21ம் திகதியே மூடியது. எமது பிரதேசத்தில் சுகாதார துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து இந்த பெகலிககொட மீன் சந்தையோடு தொடர்புடையவரகளை சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகுமாறு அறிவுறுத்திருந்தனர். ஆனால் அதில் ஒரு சிலர் அச்சுகாதார நடைமுறைகளை பின்பற்றமால் அலட்சியமாக இருந்தமையே இந்த தொற்று அதிகரித்தமைக்காகன காரணமாக கூறப்படுகின்றது. 

அத்துடன் சுகாதார துறையினர் இச்சுயதனிமைப்படுத்தல் தொடர்பான வீதிகள் மற்றும் பெகலியகொட மீன் சந்தையோடு தொடர்புடையவர்களுக்கு இக்கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என்ற ஒரு விழிப்புணர்வை அப்பிரதேசத்திலுள்ள பொது நிறுவனங்களினூடாக ஏற்படுத்தியிருந்தால் மக்கள் விழிப்புடன் இருந்திருப்பார்கள் மற்றும் கொரோனவின் அபாயம் குறைத்திருக்கலாம் என்று இப்பிரதேசத்திலுள்ளவர்கள் தமது கவலைகளை வெளியிடுகின்றனர்.

கல்குடா பிரதேசத்தில் குறிப்பாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகங்களுக்குள் காணப்படும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒரு பிரச்சினை வந்து ஒருவர் இறக்க வேண்டும் அல்லது ஒருவர் கடுமையான முறையில் பாதித்தால்தான் இவர்களின் அடுத்த சட்ட நடவடிக்கை இடம்பெறுவதும் மக்களை இறுக்கமாக நடைமுறைகளுக்குள் கொண்டு வருவதும் ஒரு கவலைக்குறிய விடயமாகும். 

இங்கு காணப்படும் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள ஒவ்வொரு குழுக்களும் அரசாங்கத்தின அறிக்கைகாக பெரும்பாலான குழுக்கள் காணப்படுகின்றதே தவிர அவைகள் மாதாந்தம் இயக்கப்படுவதற்க்கான குழுக்களாக இல்லை என்ற ஆதங்கம் இப்பிரதேச வாழ் சகலரிடமும் காணப்படுகின்றது.

எனவே கல்குடா பிரதேசத்தில் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குள் காணப்படும் அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம் கூறப்படுகின்ற அனைத்து ரீதியான இயக்கப்படாமல் இருக்கும் குழுக்கள் அந்தந்த கிராம சேவகர் பிரிவிற்குள் சிறப்பாக இயங்க வழிவகை செய்யப்படல் வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் குழுக்களை அமைக்கும் போது ஒருவர் பல குழுக்களில் இடம்பெறாமலும் அரசியல் பக்கச்சார்பின்றி சகலரும் பங்குபற்றக்கூடிய குழுக்களின் அவசியத்தை இக்கொரோனாவின் பரவல் எமக்கான செய்தியை சொல்லுகின்றது எனலாம். 

தற்போது ஏற்பட்டிருக்கும் கெரோனா அச்சத்தின் காரணமாகவும் இவ்வாழைச்சேனை பொலிஸ் பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டிருப்பதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை நிலவுகின்றது. 

அத்துடன் அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதனால் அவர்களின் கையில் பணம் இல்லாமலும் பணம் இருந்தும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியமால் என்று தமது பிள்ளைகள் மற்றும் வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையலாம் என்ற அச்சம் மக்கள மனதில் காணப்படுகின்றது. 

பொதுமக்களுக்குறிய அத்தியவாசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க சகல அரச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்து அதனை முறையான ஒரு பொறிமுறையின் அடிப்படையில் அது வெகுவிரைவாக வழங்கப்படுதல் வேண்டும்.

இப்பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் நிறுவனங்கள், பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் கூடிய ஓர் உயரிய சபையின் அவசியத்தை இக்கொரானா நோய் ஏற்பட்ட பின்னர் உணர்த்தி நிற்கின்றது எனலாம்.

இப்பிரதேசத்திலுள்ளவர்கள் கெரோனாவுடன் வாழ்தல் என்ற முறைமையையும் கொரோனவிலிருந்து விலகுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இப்பிரதேச மக்களின் அன்றாட வாழ்வாரதாரம் மீண்டும் முன்னேற சகல தரப்பும் கைகோர்த்து அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad