வடக்கு, கிழக்கிலுள்ள பின்தங்கிய கிராம பகுதிகள் அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

வடக்கு, கிழக்கிலுள்ள பின்தங்கிய கிராம பகுதிகள் அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

வடக்கு - கிழக்கிலுள்ள பின்தங்கிய கிராம பகுதிகள் இந்த அரசாங்கத்தினால் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு கிழக்கு மூன்று தசாப்த கால யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக பின்தங்கிய கிராம பகுதிகள் இருக்கின்றன. அதனால்தான் பின்தங்கிய கிராமிய அபிவிருத்திக்கு என்னை ஒரு இராஜாங்க அமைச்சராக நியமித்திருக்கின்றார்கள்.

தற்போது கொரொனா வைரஸினுடைய தாக்கம் மிக மோசமாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கமானது வெற்றி கண்டு வருகின்றது. யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

நாட்டின் சட்ட திட்டத்திற்கு மக்கள் கீழ்ப்படிந்து நடந்தால் சரி. அரசாங்கமானது கொரொனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். அதில் அரசாங்கம் மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் சகல துறைகளும் இந்த விடயத்தில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாட்டில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முழு இலங்கையையும் உலுக்கிய பயங்கரவாத குண்டுத் தாக்குதல், எமது மட்டக்களப்பு மாவட்ட சீயோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது.

சஹ்ரான் குழுவினுடைய இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது மட்டுமல்ல பாதுகாப்புத்துறை தொடர்பில் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. 

அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதோடு அது தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும் மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாத குண்டுத் தாக்குதலோடு தொடர்புபட்ட சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய கார் கூட காத்தான்குடி பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகள் கூட வெடித்துச் சிதறினார்கள்.

நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் எந்த தரப்பாக இருந்தாலும் எந்த பிரிவாக இருந்தாலும் என்ன செல்வாக்கில் இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகளை அரசாங்கம் சரியான முறையில் பல கோணங்களிலும் முன்னெடுத்து வருகின்றது. மீண்டும் ஒரு முறை இந்த நாடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாக கூடாது. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். 

நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment