20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் - இன்று முதல் சட்டமாகிறது - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் - இன்று முதல் சட்டமாகிறது

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.

இதன்மூலம், இன்று முதல் (29) 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் குறித்த திருத்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் நாயகமும், பணிக்குழாமின் பிரதானியுமான நீல் இத்தவலவும் பங்கேற்றிருந்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் இடம்பெற்றதையடுத்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இதன்போது, திருத்த சட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன. 

அதனை அடுத்து, குழு நிலையில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்து மீது எதிர்க்கட்சியினரால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதுவும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும். 

குழு நிலையின்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்பட 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான மூன்றாவது வாசிப்பும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன. 

அதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad