பிரான்ஸ் குடியுரிமைக்காக உயிருடன் உள்ள தாய்க்கு போலி மரணச் சான்றிதழ் - கிராம அலுவலர், மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, September 18, 2020

பிரான்ஸ் குடியுரிமைக்காக உயிருடன் உள்ள தாய்க்கு போலி மரணச் சான்றிதழ் - கிராம அலுவலர், மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாயும் உயிரிழந்த தந்தையும், போரின் போது உயிரிழந்ததாக மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், கிராம சேவகர், மரண விசாரணை அதிகாரி, அதனை ஏற்பாடு செய்தவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலீசாரால் நேற்றுமுன்தினம் (16) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள், தலா இரண்டு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும், புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம், மல்லிகைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவரது பெற்றோர்கள் போரின்போது, உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் தயாரித்துள்ளார்.

குறித்த யுவதியின் தந்தை 2014 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அவரது தயார், உயிருடன் வழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் போரில் உயிரிழந்ததாக கிராம அலுவலகரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை பெற்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மரண விசாரணை அதிகாரியிடம் அதனை உறுதிப்படுத்த கோரியுள்ள நிலையில், போர் நிகழ்ந்த காலப்பகுதியில் தான் அங்கு வாழாத காரணத்தினால் முள்ளியவளையில் உள்ள மரண விசாரணை அதிகாரியிடம் அதனைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, தாயார் உயிருடன் உள்ள நிலையில் மரணச் சான்றிதழையும், உயிரிழந்த தந்தைக்கு இரண்டாவது மரணச் சான்றிதழையும் பெற்று, அதன் மூலப்பிரதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, இது தொடர்பான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின்போது போலியாக மரணச் சான்றிதழ் தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயல பதிவாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டபோது உயிருடன் உள்ள தாய்க்கு மரண சான்றிதழ் வழங்கியுள்ளமையும் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்த ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டு போரின்போது உயிரிழந்ததாக, இரண்டாவது மரணச் சான்றிதழ் வழங்கியமையும் தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமாதான நீதவானும், மரண விசாரணை அதிகாரியுமான முள்ளியவளையினை சேர்ந்தவரும், மரண சான்றிதழை கோரிய பிரான்சில் உள்ளவரின் சகோதரியும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கையினை முல்லைத்தீவு மாவட்ட விசேடகுற்ற விசாரணைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்..

இவ்வாறு பெறப்பட்ட ஆவணங்கள் பிரான்ஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த யுவதிக்கு குடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

(புதுக்குடியிருப்பு நிருபர் - கீதன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad