உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி உறுதிப்பத்திரம் ஊடாக கையகப்படுத்த முயற்சி - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி உறுதிப்பத்திரம் ஊடாக கையகப்படுத்த முயற்சி

(எம்.எப்.எம்.பஸீர்) 

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டினை வெடிக்கச் செய்த இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியின் வீட்டை, போலி உறுதிப்பத்திரங்களை தயாரித்து கையகப்படுத்த முயன்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருவதாக சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. 

சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நேற்று கோட்டை பதில் நீதிவானும் கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது, சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் ஆஜரானார். 

'இந்த சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 4 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

இந்நிலையில் குறித்த ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடாத்திய குண்டுதாரியான இன்சாப் அஹமட் வசித்த வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைத்தது. அது தொடர்பில் நாம் 5 சந்தேக நபர்களைக் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றோம். 

மேலதிக விசாரணைகளில், குண்டுதாரியான இன்சாப் அஹமட்டின் வீட்டை போலி உறுதிகளை தயாரித்து கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.' என பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad