ரோயல் பார்க் கொலை­ மரண தண்டனை கைதிக்கு பொதுமன்னிப்பு - மனு மீதான பரிசீலனை திகதியை அறிவித்தது நீதிமன்றம் - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

ரோயல் பார்க் கொலை­ மரண தண்டனை கைதிக்கு பொதுமன்னிப்பு - மனு மீதான பரிசீலனை திகதியை அறிவித்தது நீதிமன்றம்

ரோயல் பார்க் கொலை­ சம்பவத்தின் மரண தண்­டனை கைதிக்கு வழங்கிய பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மனு மீதான பரிசீனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி இடம்பெறும் என திகதியிடப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (திங்கட்கிழமை) தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் இராஜகிரியாவில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி வளாகத்தில் தனது 19 வயதுடைய காதலியை கொலை செய்த குற்றச்சாட்டில் ஜூட் அண்டனி என்பவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் மேல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருப்பினும், தண்டனை போதுமானதல்ல எனக் கூறி மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

அத்தோடு 2012 ஆம் ஆண்டில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் நிராகரித்தது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜூட் அண்டனிக்கு பொதுமன்னிப்பினை வழங்கினார். அத்தோடு குற்றவாளி நாட்டை விட்டும் வெளியேறியதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது சட்டத்தின் மேலாதிக்கத்தை சவால் செய்கிறது மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad