பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வைத்தியருக்கு கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வைத்தியருக்கு கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன்

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்துள்ளார்.

கந்தளாய் - பேராறு பகுதியைச் சேர்ந்த எம்.ஏ. முகம்மட் வாஹீர் 53 வயதுடைய ஒருவருக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கந்தளாய் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி விஜேசிறி தலைமையிலான குழுவினர் கடந்த சனிக்கிழமை கொகரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹினிவெஹர பகுதியில் வைத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை இன்றைய தினம் (14) திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே தீர்ப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி பேராறு பகுதியில் பெண்ணொருவரை ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இக்குற்றவாளிக்கு எதிராக பதினைந்து வருட கால கடூழிய சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் தண்ட பணமும் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால கடூழிய சிறை விதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஐந்து வருட காலம் கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடுமையாக எச்சரித்து இத்தீர்ப்பை வழங்கி வைத்தார்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment