உதைபந்தாட்டத் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தினால் செய்ய முடியுமான அனைத்தையும் செய்து கொடுப்பேன் - மர்ஜான் பளீல் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

உதைபந்தாட்டத் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தினால் செய்ய முடியுமான அனைத்தையும் செய்து கொடுப்பேன் - மர்ஜான் பளீல் எம்.பி.

உதைபந்தாட்டத் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தின் மூலம் செய்ய முடியுமான அனைத்தையும் செய்து கொடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கூறினார்.

பேருவளை உதைபந்தாட்டச் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவான சுப்பர்சன் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எஸ்.எம். றிஸ்வான் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலை அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேருவளை உதைபந்தாட்டச் சங்கத்தின் புதிய தலைவராக ரிஸ்வான் தெரிவானமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வாழ்த்துத் தெரிவித்தார்.

மர்ஜான் பளீல் எம்.பி. மேலும் கூறியதாவது பேருவளை பிரதேசமானது உதைபந்தாட்டத்துறையில் முன்னணி பிரதேசமாகும். தேசிய, சர்வதேச ரீதியில் விளையாடி நாட்டிற்கும், பேருவளைக்கும் புகழ் சேர்த்த பல வீரர்களை உருவாக்கிய இப் பிரதேச விளையாட்டுத்துறையை மேலும் கட்டியெழுப்ப பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னால் முடியுமான அனைத்தையும் செய்வேன்.

பேருவளையின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்கு அரசினதும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினதும் பங்களிப்பை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

உதைபந்தாட்ட வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்குதல், விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல், உதைபந்தாட்டத்துறைக்கு தேசிய, சர்வதேச ரீதியில் புகழ்சேர்த்த பேருவளை வீரர்களை கௌரவித்தல் போன்ற நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும் றிஸ்வான் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

பேருவளை பகுதியில் நவீன வசதிகளுடனான பூரண விளையாட்டரங்கொன்றை அமைப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறிய றிஸ்வான் எமது உதைபந்தாட்டச் சங்கம் நடாத்தும் லீக் போட்டிகள் தற்போது தர்கா நகர் ஸாஹிரா மைதானம், பாக்கீர் மாக்கார் மைதானம் ஆகியவற்றிலே நடாத்தப்படுகிறதையும் சுட்டிக்காட்டினார். 

தர்கா நகர் பாக்கீர் மாக்கார் விளையாட்டரங்கினையும், பேருவளை பீச் விளையாட்டரங்கையும் நவீன வசதிகளுடன் புனரமைத்து விளையாட்டுப் போட்டிகளை செவ்வனெ நடாத்த வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

பேருவளை உதைபந்தாட்டச்சங்கம் மூலம் உதைபந்தாட்டத்துறையை மேலும் முன்னேற்ற எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தலைவர் றிஸ்வான கூறினார்.

சுப்பர்சன் விளையாட்டுக்கழகத்தின் 35 வது வருட பூர்த்தி விழா பற்றியும் அவர் பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார்.

பேருவளை விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad